அகில இந்திய மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை மறுத்த பிரதமர் மோடி சமூக நீதியைப் பற்றிப் பேசலாமா என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாட்டின் 18 ஆவது பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாகத் தேர்தல் ஆணையம் பிரித்து நடத்தும் மக்களவைத் தேர்தலில், இன்றோடு (26-4-2024) இரண்டு கட்டத் தேர்தல்கள் முடிவடையும் நிலையில், பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சார மேடைகளை, பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டும் மேடைகளாக்கி, மக்களை, ஏதோ ஒன்றுமே தெரியாதவர்கள்போலக் கருதி, நாளும் ஒருபுறம் பொய்; மறுபுறம் சட்ட விரோதமாக மதம், ஜாதி இவற்றை நேரிடையாகவே கூச்சநாச்சமின்றி, தாம் உறுதி எடுத்த அரசமைப்புச் சட்டப் பிரமாணத்திற்கு எதிராகவே பேசி வருகிறார் என்பது இந்த நாட்டு அரசியல் தளம் இதற்குமுன் கண்டிராதது!” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது:
“ வாக்குவங்கி அரசியலுக்காகப் பேசுகிறார்
காங்கிரஸ் - இந்தியா கூட்டணி பதவிக்கு மீண்டும் வந்தால், ‘‘எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி,. என்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் போன்றோருக்குரிய இட ஒதுக்கீட்டையே ஒழித்து அழித்துவிடுவார்கள்; மத அடிப்படையையே புகுத்துவார்கள்’’ என்றெல்லாம் திட்டமிட்டே, வாக்கு வங்கிக் கண்ணோட்டத்துடன் பேசி வருவது, மிகப்பெரிய நம்பகமற்ற அசல் கேலிக்கூத்து ஆகும்!
இட ஒதுக்கீட்டுக்காக அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம்!
அதற்கான காரணங்கள் இதோ:
1. காங்கிரஸ் அரசு 1950 ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, 1928 இல் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆதரவில் நிறைவேற்றப்பட்ட வகுப்புவாரி உரிமை ஆணையைச் செல்லாது என்று அரசமைப்புச் சட்டத்தின் ஒரு பிரிவைக் காட்டி, ‘‘அல்லாடிகளை’’ விட்டு செய்தபோது, தந்தை பெரியார், சென்னை மாகாணத்தில் நடத்திய மக்கள் கிளர்ச்சியின் கோரிக்கைக்குத் தலைவணங்கி, ‘‘மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற பிரச்சினை வரக்கூடும்‘’ என்று கூறி, அதற்கு ஒரே தீர்வு அரசமைப்புச் சட்டத்தினைத் திருத்தி, 15(4) என்ற பிரிவினை ‘‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்’’ (Socially and Educationally Backward) என்று, முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து திருத்தம் நிறைவேறச் செய்தவர் பிரதமர் நேரு; துணை நின்றவர் சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். (ஆர்.எஸ்.எஸ். - மேல்ஜாதியினர் கடுமையாக இதனை எதிர்த்தனர்). எஸ்.சி., எஸ்.டி., என்பவர்களுக்கு வரையறை முன்பே ஏற்பட்டுவிட்ட நிலையில், ஓ.பி.சி. என்பதற்கு வரைமுறை இல்லாத குறை முதல் சட்டத் திருத்தம் மூலம் நிறைவேறியது என்பதை பிரதமர் மோடியோ, அவரது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வோ மறுக்க முடியுமா?
உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்பதன் பின்னணி என்ன?
இட ஒதுக்கீட்டின் அடிப்படையைத் தகர்க்கும் வகையில் (வாய்ப்பற்று வதிந்தவர்களுக்கு வரவேண்டிய உரிமையை, கொழுத்தவர்களுக்கும், புளியேப்பக்காரர்களுக்கும் விநியோகம் செய்வதுபோல) பிரதமர் மோடி, அடிப்படைக் கட்டுமானத்தையே மாற்றி, ஒரே வரியில், நிலையற்ற பொருளாதார அடிப்படையைக் காட்டி EWS என்ற கோட்டாவை ஏற்படுத்தி, நாளும் 2222 ரூபாய் சம்பாதித்தாலும், ‘‘உயர்ஜாதி ஏழைகள்’’ என்று கூறி, 10 சதவிகித இட ஒதுக்கீடு தந்து, முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தையே தோற்கடித்தவரா, இப்போது இப்படி இட ஒதுக்கீட்டுக்கு ஏதோ மிகப்பெரிய போராளிபோல பேசுவது - அசல் போலி நாடகம் அல்லவா?
பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்த வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தது பா.ஜ.க.தானே!
2. ஒன்றிய அரசு அலுவலகங்களில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் என்பதற்கான பரிந்துரை - மண்டல் குழுவின் பரிந்துரைப்படி 27 சதவிகித வேலை வாய்ப்புக்குரிய ஆணையைப் பிறப்பித்த பிரதமர் வி.பி.சிங்கின் ஆட்சியை, 10 மாதங்களில் கவிழ்த்து, மண்டலுக்கு எதிராகக் கமண்டலைத் தூக்கி நடத்தப்பட்ட ரத யாத்திரையில், ஆர்.எஸ்.எஸ். பணியாளாக ஒத்துழைத்து இருந்தவர்தானே இன்றைய பிரதமர் மோடி?
மருத்துவக் கல்வியில் அகில இந்திய கோட்டாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க மறுத்ததும் ஒன்றிய பா.ஜ.க. அரசுதானே!
3. பழைய கதையை மறந்துவிட முடியுமா? ‘நீட்’ தேர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்திய கோட்டாவில் இட ஒதுக்கீட்டைத் தர உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், மோடி ஆட்சி அலட்சியம் காட்டி வந்தது. அதனை எதிர்த்து வழக்காடிய தி.மு.க.வும், அக்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினும், உச்சநீதிமன்றம் வரை சென்று, போராடிப் பெற்ற நீதிமன்றத் தீர்ப்பின் நிர்ப்பந்தம் காரணமாகவே, 27 சதவிகிதம் மருத்துவப் படிப்பில் என்பது - தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் கிட்டும்படிச் செய்த பெருமை ‘திராவிட மாடல்’ ஆட்சி, ஒடுக்கப்பட்டோருக்குத் தந்த அருட்கொடை அல்லவா?
4. முந்தைய பீகார் தேர்தலின்போது, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கூறி, நாட்டின் எதிர்ப்புக்குப் பிறகு, மவுனமானாரே, அந்த வரலாறு மறந்துவிட்டதா?
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பாக இருப்பானேன்?
ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது சட்டத்தின் பாதுகாப்பை சமூகரீதியான இட ஒதுக்கீட்டுக்கு அளிப்பதற்கான அறிவியல்பூர்வ முன்னோடித் தேவையாகும். காரணம், இட ஒதுக்கீட்டை அந்தந்த மாநில அரசுகள், அவரவர் தேவைக்கேற்ப மாற்றி உயர்த்திட்ட போதெல்லாம் உச்ச, உயர்நீதிமன்றங்களில் கேட்ட கேள்வி, ஜாதிவாரியான புள்ளி விவரம் (Quantifiable Data) உண்டா என்ற கேள்விதான்!
அதற்கு விடையாக, ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று முன்பு பீகாரில் நிதிஷ்குமார் (அணி மாறாதபோது) சட்டமன்றத்திலும் குரல் கொடுத்து, பீகார் பா.ஜ.க. எதிர்க்கட்சித் தலைவர் உள்பட குழுவாக, பிரதமர் மோடியை டில்லிக்கே சென்று, நேரில் வற்புறுத்தியபோதும், பிரதமர் மோடி அசைந்தாரா? இசைந்தாரா?
அப்போது காட்டிய முகம் வேறு; இப்போது காட்டும் முகம் வேறா? வித்தையா?
சமூகநீதி என்னும் குளவிக் கூட்டில் பிரதமர் மோடி கை வைத்தால்...?
இந்தியா கூட்டணி - தி.மு.க. கூட்டணி - காங்கிரஸ் கூட்டணி - ஜாதிவாரிக் கணக்கெடுப்பை உறுதியாக நடத்தி, 50 சதவிகித உச்சவரம்பை நீக்குவோம் என்று கூறியிருப்பதுபோல, மோடியும், அவரது கட்சியான பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பரிவாரங்களும் கூறுமா?
தேர்தல் அறிக்கையில் இதுகுறித்து மூச்சுப் பேச்சு உண்டா? EWS என்ற உயர்ஜாதி - பார்ப்பன மேலாதிக்க ஜாதிகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பதற்காக மட்டும் 50 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதமாக ஆகலாம் என்றால், ஏன் இந்த ஓரவஞ்சனை, இரட்டை நாக்கு, இரட்டைப் போக்கு? ” என்று வீரமணி கூறியுள்ளார்.