பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட பங்காரு பாலகன் 
தமிழ் நாடு

பார்வையற்றவரை நடு வழியில் இறக்கிவிட்ட கொடுமை! - 'நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?’

Staff Writer

பார்வைத்திறன் மாற்றுத்திறனாளியைப் பேருந்தில் நடுவழியில் இறக்கிவிட்ட அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து திருச்செந்தூர் போக்குவரத்துக் கழகக் கிளை மேலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள புகாரில், பங்காருபாலகன் எனும் பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளி நடந்த சம்பவம் குறித்து விவரித்துள்ளார்.

அதன் விவரம்:

“1. பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆகிய நான்   18.04.2024 அன்று மதியம் சுமார் 2 மணியளவில் நானும் எனது மகனும் கிருஷ்ணாபுரத்திலிருந்து திருநெல்வேலி செல்வதற்காக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள திருச்செந்தூர் பணிமனையைச் சேர்ந்த TN-32, N 4055 பேருந்தில் ஏறி பயணம் செய்தோம்.

 2. நடத்துநர்  பயணி சீட்டு கேட்டு வந்தார்; அப்போது நான் மாற்றுத்திறனாளிகள் மாவட்டம் முழுவதும்  கட்டணமில்லாமல் பயணம் செய்வதற்க்கான தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை வழங்கிய பயண அட்டையைக் காண்பித்து எனது பையனுக்கு மட்டும் ரூபாய் 15 கொடுத்து பயணச்சீட்டு கேட்டேன்.

3. அப்போது நடத்துநர் போக்குவரத்துத் துறை வழங்கிய அட்டை செல்லாது; இது போலி அட்டை; பேருந்தைவிட்டு கிழே இறங்கு அல்லது பயணச்சீட்டு வாங்கு என என்னை ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்றும்கூட இறக்கம் இல்லாமல் குறைந்தபட்ச மனிதாபிமானம்கூட பார்க்காமல் ஒருமையில் பேசினார்.

4. உடனே நான் பேருந்து காட்டுப் பகுதியில் செல்கிறது; ஆகையால் இறங்கமுடியாது நான் திருநெல்வேலிசெல்ல வேண்டும்; என்னைத் திருநெல்வேலியில் கொண்டு இறக்கிவிடுங்கள் என்று கூறினேன்.

 5. அதற்கு நடத்துநர், உங்க அப்பன்வீட்டுப் பேருந்தா, ஒழுங்கு மரியாதையாக கீழ இறங்கு என மீண்டும் ஒருமையில் பேசினார். நான் ஒருமையில் பேசாதீர்கள் என மீண்டும் கூறினேன். அதற்கு அந்த நடத்துநர்,  நீ என்ன பெரிய இவனா? உனக்கு என்ன மரியாதை கிடக்கு, குருட்டுப் பயல, உன்னைப் பேருந்தில ஏத்துனதே தப்பு; உனக்கு மரியாதவேற கொடுக்கணுமா என்று கூறியும், குருட்டுப்பய நீ எல்லாம் பேருந்துக்கு வரலன்னா எவன் கேக்கான்? எங்க உசிரை வாங்க வார என்று பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் முன்னால் என்னுடைய ஊனத்தைக் கூறி பொதுமக்கள் முன்னிலையில் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் வாயால்கூற முடியாத அளவுக்கு திட்டித் தீர்த்துவிட்டார்.

7. பேருந்து வி.எம். சத்திரம் வந்தவுடன் எனது கையைப் பிடித்து இழுத்து கீழே இறங்கு என இழுத்தார்; நான் இறங்க மறுத்தேன்; உடனே எனது கையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டு பேருந்தை எடுத்துச் சென்றுவிட்டனர்.

8. உடனே, நான் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்த உதவி எண் 149- க்கு போன் செய்து புகார் செய்தேன்; உடனே புகார் எண்:  CBE022804 ஆகப் பதிவு செய்யப்பட்டது.

9. நான் பார்வையற்றவன் என்பதால் திருநெல்வேலி செல்வதற்கு உதவி செய்வதற்காக அவசர போலீஸ் 100-ஐ அழைத்து புகார் கூறினேன். புகார் எண்:CFS21332665 புகார் கூறிய பிறகு யாரும் உதவி செய்யாததால் எனது பையனை அழைத்துக்கொண்டு திருநெல்வேலிக்குச் சென்றுவிட்டேன்.

10.  இதுவரை நான் எனது ஊனத்தைப் பற்றியும் எனக்குப் பார்வை தெரியவில்லை என்பதைப் பற்றியும் சிறிதளவும் கவலைப்பட்டது கிடையாது. ஏனென்றால் ஊனம் என்பது உடலளவில் தான் மனதளவில் கிடையாது என்பதைக் கருத்தில்கொண்டு எனக்குத் தேவையானவற்றை நானே யாருடைய எதிர்பார்ப்பும் இல்லாமல் பூர்த்தி செய்துகொண்டு எனது குடும்பத்தை நான் பாதுகாத்து வந்த நிலையில் இன்று இந்த நடத்துநர் என் ஊனத்தைப் பற்றி பொதுமக்கள் முன்னிலையில் வசைபாடியதைப் பார்க்கும்போது ஊனத்துடன் பிறப்பவர்கள் இந்த மண்ணில் வாழ்வதற்குத் தகுதியற்றவர்கள் நாம் இனி வாழ்ந்து என்னவாகப் போகிறது என்று ஒரு கேள்வியோடு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, இதுல இருந்து எப்படி மீண்டு வரப் போகிறேன் என்று தெரியாமல் சாப்பிடுவதற்குகூட மனம் இல்லாத ஒரு சூழ்நிலையில் வாடி வருகிறேன்.

11.  எனது மனு மீது உரிய விசாரணை நடத்தவேண்டும்; மனுவை எந்த சூழ்நிலையிலும் முற்றாக்கம் செய்யக்கூடாது; இந்த சமுதாயத்தில் வாழ்வதே ஒரு போராட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இழுக்கு ஏற்படுத்திய நபர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட கூடியவர்கள் என்பதால் அவர்களைக் காப்பாற்றும் நோக்கில் தாங்கள் ஈடுபட வேண்டாம் என உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

12. மேற்படி நடத்துநரின் இத்தகைய செயலானது இந்திய அரசியலமைப்பு சாசனத்திற்கும்  மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1993-க்கும் எதிரான செயலாகும்.

எனவே, பேருந்தில் பயணம் செய்ய விடாமல் கீழே தள்ளிவிட்ட நடத்துநர் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்கவும், மாற்றுத்திறனாளி என்று கூட பாராமல் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியும், எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அவமானத்திற்கு தகுந்த நஷ்டயீடு பெற்றுத்தரவும் வேண்டும்.” என்று பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பங்காருபாலகன் தன் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாற்றுத்திறனாளிகள் தரப்பில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.