வீராணம் ஏரி 
தமிழ் நாடு

வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட மறுப்பது அநீதி!

Staff Writer


சம்பா சாகுபடிக்காக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப் படும் என விவசாயிகளுக்கு நம்பிக்கையைக் கொடுத்து பயிர் சாகுபடி செய்யச் சொல்லிவிட்டு, இப்போது தண்ணீரைத் திறக்காமல் ஏமாற்றுவதா என்று எதிர்ப்பும் கண்டனமும் எழுந்துள்ளது.


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகில் அமைந்துள்ள வீராணம் ஏரி 47.50 அடி உயரமும், 1.46 டி.எம்.சி கொள்ளளவும் கொண்ட வீராணம் ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை நம்பி காட்டுமன்னார் கோயில், சிதம்பரம், புவனகிரி உட்பட்ட பகுதிகளில் 44 ஆயிரத்து 856 ஏக்கரில் நெல் முதலிய பயிர்களை சாகுபடி செய்கின்றனர். மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும், காவிரிப் பாசன மாவட்டங்களிலும்  குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போகம் சாகுபடி நடைபெறும் என்றாலும் கூட, வீராணம் ஏரியின் பாசனப் பகுதிகளில் சம்பா பருவ சாகுபடி மட்டுமே செய்யப்படுவது வழக்கம்.

மேட்டூர் அணையில் தேவைக்கு அதிகமாக தண்ணீர் இருப்பதாலும், செப்டம்பர் 13&ஆம் தேதி முதல் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இந்த முறை சம்பா சாகுபடியை வெற்றிகரமாக செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் கடந்த சில வாரங்களாகவே நெல் பயிரிட்டு வருகின்றனர். ஆனால், வீராணம் ஏரியிலிருந்து இன்று வரை கடலூர் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவில்லை.

இவற்றைக் குறிப்பிட்டு குறைகூறியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி,” ஒருபுறம் வீராணம் ஏரியிலிருந்து வினாடிக்கு சராசரியாக 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மற்றொருபுறம்,  பாசனக் கால்வாய்களும், குளங்களும் தூர்வாரப்படாததால் தான் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட வில்லை என்று இன்னொருதரப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் எது உண்மை எனத் தெரியவில்லை.” என்று கூறியுள்ளார். 

”முதலாவது, போதிய தண்ணீர் இல்லாவிட்டால் நெற்பயிர்கள் வெயிலைத் தாங்க முடியாமல் வாடி விடும். இரண்டாவதாக,  வெப்பத்தை தாக்குபிடித்து நெற்பயிர்கள் நின்றாலும் கூட, ஓர் அடிக்கும் கூடுதலாக வளரவில்லை என்றால், வடகிழக்கு பருவமழையில் மூழ்கி அழுகி விடும். இந்த இரு ஆபத்துகளில் இருந்தும் சம்பா நெற்பயிர்களைக் காக்க வேண்டுமானால், அடுத்த ஒரு மாதத்திற்குள் ஓர் அடி உயரத்திற்கு பயிர்கள் வளர்வதை உறுதிசெய்யும் அளவுக்கு வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட வேண்டும்.”என்றும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார். 

”வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கான தண்ணீர் திறப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஏரியின் மொத்தக் கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. மேட்டூர் அணையும் கிட்டத்தட்ட நிறைந்து தளும்புகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரில் வினாடிக்கு  5000 கன அடி வீதம் கொள்ளிடத்தில் திருப்பி விட்டு, அந்த நீர் கீழணைக்கு வருவதை உறுதி செய்தால், அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு அதிக அளவாக ஒரு வாரத்தில் வீராணம் ஏரியை நிரப்பி விட முடியும். வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை பாசனத்திற்கு திறக்க அந்த தண்ணீர் போதுமானது.” என்று யோசனையும் கூறியுள்ளார் அன்புமணி. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram