வேங்கைவயல் 
தமிழ் நாடு

வேங்கைவயல்... 17 மாதங்கள் ஆகியும் கைது இல்லையே!- மார்க்சிஸ்ட் கட்சி அவநம்பிக்கை!

Staff Writer

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த குற்றவாளிகளை 17 மாதங்களாகியும் இதுவரை கைதுசெய்ய முடியவில்லை என்பது நம்பும்படியாக இல்லை என்று தி.மு.க. கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியே அவநம்பிக்கை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் காவல்துறை தலைமை இயக்குநருக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதன் விவரம்:

“புதுக்கோட்டை மாவட்டம், இறையூர், வேங்கை வயல் கிராமத்தில் கடந்த 2022ம் ஆண்டு, டிசம்பர் 26ந் தேதியன்று பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டதும், அந்நீரை பருகிய பட்டியலின மக்கள் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனால் நாடே பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்திட வேண்டுமென தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு ஜனநாயக இயக்கங்கள் போராட்டங்களை மேற்கொண்டன. இச்சம்பவத்தை நீதிமன்றங்களும் கடுமையாக கண்டித்திருந்தன.

இவ்வழக்கு முதலில் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்த நிலையில், வழக்கின் முக்கியத்துவம் கருதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. சிபிசிஐடி போலீசார் பலகட்ட விசாரணையை மேற்கொண்டதுடன் சந்தேகப்பட்டவர்களது மரபணு சோதனை, குரல்மாதிரி சோதனை உட்பட மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், சம்பவம் நடந்து 17 மாதங்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனால், பொதுமக்கள் மத்தியில் சிபிசிஐடி விசாரணை குறித்து பலவிதமான குழப்பங்களும், சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளன.

ஒரு சிறு கிராமத்தில் நடந்த இச்சம்பவத்தில் குற்றவாளிகளை 17 மாதங்களாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது. உண்மையில், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லையா அல்லது குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டும் கைது செய்வதற்கு காவல்துறை தயங்குகிறதா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இச்சம்பவத்தில் காவல்துறை காட்டிவரும் அளவுக்கதிகமான தாமதம் காவல்துறையின் மீதான நம்பகத் தன்மையை குறைப்பதாக உள்ளது என்பதை கவனப்படுத்துகிறோம்.

எனவே, வேங்கை வயல் சம்பவத்தில்  இனியும் கால தாமதமின்றி குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என்று பாலகிருஷ்ணனின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.