விமான சாகச நிகழ்வைக் காணவந்த 5 பேர் வெப்பவாதத் தாக்கத்தில் பலி ஆனார்கள் என்றும் இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவும், உரிய இழப்பீடு வழங்கிடவும் சி.பி.ஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை மெரினா கடற்கரையில், விமானப்படையின் சார்பில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க பல லட்சக் கணக்கானோர் கூடியுள்ளனர். அவ்வாறு பங்கேற்றவர்களில் இருநூற்றுக்கும் அதிகமானவர்கள் வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டதாகவும், 93 பேர் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் உயிரிழந்துள்ள செய்தி வேதனை தருகிறது.” என்று கூறியுள்ளதுடன் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.
”விமானப்படை சாகச நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்ட அக்டோபர் 6 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, மேலும் பள்ளி விடுமுறைக்காலம் என்பதால் இந்த சாகச நிகழ்வுகளைக் காண லட்சக்கணக்கானவர்கள் குடும்பமாக கூடுவார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல சுமார் 15 லட்சம் மக்கள் கூடி விமான சாகசங்களை கண்டுள்ளார்கள். காலை 10 மணி முதல் 1 மணி வரை கடுமையான வெயிலாக இருக்கும் என்பதால், அதற்கேற்ற முன்னேற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.
உயிரிழப்புகளுக்கான காரணங்களைப் பற்றி பேசுகையில், “உரிய நேரத்தில் குடிநீர் எடுத்துக்கொள்ளாமல் அதனால் ஏற்பட்ட வெப்ப வாதம் உயிரை பறித்திருக்கலாம்” என்று கூறியுள்ளார்கள். தமிழ்நாடு அரசு, மருத்துவமனையில் 4 ஆயிரம் படுக்கை ஏற்பாடு செய்யப்பட்டு, மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்ததாக கூறியுள்ளது. இருப்பினும், வெப்ப வாத அபாயம் பற்றிய எச்சரிக்கை முன்பே விடப்பட்டதா? மக்கள் கூடி பார்வையிடும் இடங்களில் குடிநீர் வசதிகள் உரிய முறையில் செய்யப்பட்டதா? என்ற கேள்விகள் பொதுவாக எழுந்துள்ளன. எனவே, இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும்.
மேலும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடுவதோடு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தரமான உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இனி வரும் நாள்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காதவகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.” என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.