அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும் திருநங்கையுமான அப்சராவுக்கு யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும், திருநங்கையுமான அப்சரா ரெட்டி குறித்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட அவதூறு வீடியோக்களை யூடியூபில் பதிவிட்டுள்ளார் பிரபல மாடலிங் நிறுவனத்தை நடத்தி வரும் ஜோ மைக்கேல் பிரவீன்.
அவர் தன்னுடன் சேர்ந்து பணியாற்றுமாறு அப்சராவை அனுகியதாகவும், அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்ததாலேயே, அவதூறு வீடியோக்களை மைக்கேல் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த அவதூறு வீடியோக்களை யூடியூபில் இருந்து கூகுள் நிறுவனம் ஏற்கெனவே நீக்கிவிட்டது.
இந்நிலையில், யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் தனக்கு எதிராக அவதூறு வீடியோக்களை யூடியூபில் பரப்பியதாக அப்சரா ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் யூடியூபர் வெளியிட்ட அவதூறு கருத்துகளால் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாகவும், அதனால் தனக்கு ரூ.1.25 கோடி தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அப்சரா ரெட்டி கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், யூடியூபில் கருத்துகளை வெளியிடும் உரிமை நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. யூடியூபில் கருத்துகளை வெளியிட உரிமை உள்ளது என்றாலும் தனிப்பட்ட நபரின் உரிமையில் தலையிடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க ஜோ மைக்கேல் பிரவீனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.