தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை - எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் சென்னையில் இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, கஸ்தூரி மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில், எழும்பூர் போலீஸார் கஸ்தூரி மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்தனர். அவருக்கு சம்மன் அளிக்கச் சென்றபோது அவரது வீடு மூடியிருந்தது. இதையடுத்து அவர் தலைமறைவானதாக தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். முன்னதாக முன்ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன்பின்னர், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த நடிகை கஸ்தூரியை கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர். பின்னர், நேற்று முன்தினம் சென்னை அழைத்து வந்து, ஒன்றரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி சார்பில் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகரன் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் தனிமையில் வசித்து வருகிறேன். கணவர் ஆதரவு கிடையாது. நான் தலைமறைவாகவில்லை. என்னுடைய சென்னை வீட்டில் போலீஸார் சம்மன் ஒட்டியது எனக்கு தெரியாது. என்னை சிறையில் அடைத்தால் எனது குழந்தை பரிதவித்து விடும். எனவே எனக்கு ஜாமின் அளிக்க வேண்டும்” என அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு எழும்பூர் 14ஆவது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கஸ்தூரி தரப்பில், மனுதாரர் சிங்கிள் மதர் என்றும், மனுதாரருக்கு சிறப்பு குழந்தை உள்ளதால், அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில் ஜாமின் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.