சவுக்கு சங்கர் 
தமிழ் நாடு

குண்டர் சட்டம்...சவுக்குக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்!

Staff Writer

குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யுடியூபர் சவுக்கு சங்கர் அளித்த பேட்டி ஒன்றில், தமிழக பெண் போலீசார் குறித்து தரக்குறைவான கருத்துகளை தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டார். பின், அவர் கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு தொடரப்பட்டது. மேலும், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் சங்கர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை தொடர்ந்து அவர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.

இதை எதிர்த்து சங்கரின் தாயார் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்தனர்.

இதை தொடர்ந்து சங்கரின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின்போது, 'நீதித்துறை குறித்து எதுவும் தவறாக பேச மாட்டேன் என உறுதிமொழி அளிக்க தயாராக இருக்கிறேன்' என சவுக்கு சங்கர் தாயார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், 'நாங்கள் ஏன் அவ்வாறு உறுதிமொழி தரச் சொல்லப் போகிறோம்? எங்களை பொறுத்தவரை உறுதிப்படுத்தப்படாத எந்த தகவலையும் பேசக்கூடாது என்பதுதான் மிகவும் முக்கியமானது,' எனத் தெரிவித்தனர்.

பின்னர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்கில் இருந்து சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த ஜாமின் உத்தரவு இந்த குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டும்தான் என்றும், மற்ற வழக்குகளுக்கு இது பொருந்தாது என்றும் நீதிபதிகள் தெளிவுப்படுத்தினர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram