சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 42 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு, தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
கொரோனாவின் புதிய வகையான 'ஜேஎன்1' வகை தொற்று, பல்வேறு நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது. இந்த வகை கொரோனா கிருமி வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுவதாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.
உலக அளவில் பல நாடுகளில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தொற்றுடன் பிற நோய்த் தொற்றுகளின் அதிகரிப்புக்கும் இந்த திரிபு காரணமாக அமையலாம் என்றும் அச்சத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டிலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் திருத்தணியைச் சேர்ந்த 43 வயதான ரெஜினா என்பவர் கொரோனா தொற்று காரணமாக சென்னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நேற்று முன் தினம் 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 180க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42 வயதான ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த அவர், கடந்த டிசம்பர் 31ஆம் தேதி முதல் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.