தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கிய நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார். இந்த சூழலில் நேற்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார்.
அந்த கட்சிக் கொடியில் சிவப்பு, மஞ்சள் நிறங்களும் இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகைப்பூவும் இடம்பெற்றிருந்தன. கொடி வடிமைப்பு குறித்து பலரும் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ஆர்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் தவெக கொடி தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்துக்கு இணையதளம் மூலம் புகார் அளித்துள்ளார்.
அதில், தவெக கொடியில் சட்டத்துக்குப் புறம்பாக கேரள மாநிலத்தின் போக்குவரத்துக் கழகத்தின் அரசு சின்னமான யானை இடம்பெற்றுள்ளது. மேலும் வெள்ளாளர் சமூகத்தில் பயன்படுத்தி வரும் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் கொடியின் நிறமும் ஸ்பெயின் நாட்டின் தேசியக் கொடியின் நிறமும், ஈழத்தமிழர்களின் சின்னமாக விளங்கும் வாகை பூவின் சின்னத்தையும் தவறாக பயன்படுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2012 ஆம் ஆண்டு உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. தேர்தல் சின்னத்தில் விலங்குகள் பயன்படுத்துவது சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறியுள்ளது. ஆகவே தவெக தலைவர் விஜய் ஈது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, விஜய் கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றுள்ளதால் அதனை நீக்கியாக வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி புகார் மனு கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.