மகளிர் உரிமைத் திட்டத்தில் ஒரு இடத்தில் பிரச்னை என்றாலும், அது மாநிலம் முழுவதும் பெரிய செய்தியாக மாறிவிடும்; அதனால் கவனமாக இருக்கவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்தன. அதில் தகுதியுள்ளவர்கள் என ஒரு கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, மகளிர் உரிமைத்தொகை வரும் 15ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. முதலமைச்சரின் இல்லத்தில் உள்ள முகாம் அலுவலகத்திலிருந்து, தலைமைச்செயலகத்தில் உள்ள அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, “அதிகப்படியான நிதி ஒதுக்கீடு தேவைப்படும் திட்டமாகவும் - அதிகப்படியான பயனாளிகள் உள்ளடக்கிய திட்டமாகவும் இது அமைந்துள்ளது. ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெறுகிறார்கள் என்பதால் கிடைக்கின்ற பாராட்டு, ஒரு கோடி பாராட்டுகளுக்கு சமம். அதே போல்தான் சிறு தவறு நடந்துவிட்டால் அதனால் கிடைக்கும் கெட்டபெயரும், என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. எனவே எந்த இடத்திலும் - எந்தச் சூழலிலும் - எந்த ஒரு தனிநபருக்கும் சிறு தவறுகூட நடந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.” என்றார்.
” தகுதி பெற்ற குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும் வங்கிகளில் அவர்களின் கணக்கில் உரிமைத்தொகை வரவு வைக்கப்படும். ஏ.டி.எம். கார்டுகள் முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், படிப்படியாக விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். பயனாளிகளுக்கு பணத்தை எடுப்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படக் கூடாது, அதிலும் கவனமாக இருக்கவேண்டும்.” என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.
மேலும், ”அதேபோல், வரும் 15 ஆம் தேதி, என்னுடைய சார்பில் மகளிருக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்தியில், பணம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய Toll-Free எண்ணும் சேர்க்கப்பட வேண்டும். இந்தத் திட்டத்தில் இணைந்துகொள்ள ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. தகுதியுள்ளவர்கள் என நாம் தேர்ந்தெடுத்துள்ளது, 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர்.” என்றும்,
”மற்றவர்களின் கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்பதை அவர்களுக்குச் சொல்லியாக வேண்டும். எந்த அடிப்படையில் முடியவில்லை என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பியாக வேண்டும்.
வரும் 15ஆம் நாள் மாவட்டத் தலைநகரங்களில் நடக்கும் விழாவில் பணம் கிடைக்காத மகளிர் வந்து கேட்டால், பதில் சொல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும். தனியாக இதற்கென அலுவலர்களை உட்கார வைத்து, இப்படி கேட்க வரும் மகளிரிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி, 'நாங்கள் பரிசீலிக்கிறோம்' என்பதைச் சொல்லி அனுப்பி வைக்க வேண்டும். இது மிகமிக முக்கியம்.” என்றும் முதலமைச்சர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
“ இதைச் செய்யாவிட்டால், ஏதாவது ஒரு இடத்தில் பிரச்சினை என்றாலும், அது மாநிலம் முழுவதும் பெரிய செய்தியாக மாறிவிடும். அதனால் கவனமாக இருக்கவேண்டும்.” என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, முதலமைச்சரின் செயலாளர் நா. முருகானந்தம், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் தாரேஸ் அகமது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட சிறப்புப் பணி அலுவலர் இளம் பகவத் ஆகியோர் கலந்துகொண்டனர்.