சென்னை, கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு 
தமிழ் நாடு

புதுசா கட்சி தொடங்குறவன்லாம்... விஜய்யைக் குறிப்பிடாமல் ஸ்டாலின் கடும் சாடல்!

Staff Writer

புதியதாகக் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், த.வெ.க. முதல் மாநில மாநாட்டில் தி.மு.க.வை எதிர்த்துப் பேசியது பரபரப்பை உண்டாக்கியது. அதையடுத்து, நேற்று நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் தி.மு.க. அரசைக் கண்டித்தும் எதிர்த்தும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், தி.மு.க. தலைமை இதில் மௌனம் காத்துவந்தது.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அனிதா அச்சீவர்ஸ் அகடமியின் மாணவர்களுக்குப் பரிசு வழங்கிப் பேசினார்.    

அப்போது, “ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்துப் பார்த்து திராவிட மாடல் அரசு செயல்படுத்திக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்களை ஒவ்வொரு நிலையிலும் உயர்த்துவதுதான் இலட்சியமாகச் செயல்படுகிறது. ஆனால் இந்த ஆட்சி எதுவும் செய்யவில்லையென குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எந்தக் கட்சியாக இருந்தாலும் இதையெல்லாம் பார்க்கவேண்டும்.” என்றார் அவர். 

மேலும், ”கடந்த மூன்றரை நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம். மிச்சமீதி இருக்கிற வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. பல்வேறு மாநிலங்கள், நாடுகளிலிருந்து தொழில்முனைவோர் போட்டிபோட்டிக்கொண்டு தமிழ்நாட்டை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. அதற்குத் தேவையான மனிதவளத்தையும் கல்லூரிகளில் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.

அனிதா அச்சீவர்ஸ் அகடமியைப் போல, இந்த அரசாங்கம் அச்சீவ் பண்ணக்கூடிய அரசாங்கமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதுதான் முக்கியம். துறைவாரியான எந்தெந்த மாநிலங்கள் முன்னிலையில் இருக்கின்றன என ஒன்றிய அரசு வெளியிடும் அறிக்கைகளில், முதன்மையான இடத்தைப் பெறக்கூடிய அரசாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.

திட்டங்களை அறிவித்துவிட்டுப் போய்விடலாம்; அது சாதாரணம். நிதியைக்கூட ஓரளவுக்கு ஒதுக்கிவிடலாம். அதுவும் ரொம்ப சாதாரணம். ஆனால் திட்டங்களின் பயன்கள் உரியவர்களுக்குப் போய்ச்சேர்கிறதா என்பதைக் கண்காணிப்பதுதான் முன்னிலைக்குக் காரணம். ஏராளமான திட்டங்களைக் கொண்டுவந்தால் பத்தாது. அவற்றைக் கண்காணித்து நிறைவேற்ற வேண்டும்.

அண்மையில் சென்னையில் 2 நாள்கள் பெய்த மழை நீர் வடிந்துவிட்டது. ஆனால் சில மீடியாக்கள் போன ஆண்டு பெய்த மழைப் படத்தைப் போட்டு, பார்த்தீர்களா ஒரு மழைக்கே இப்படி தண்ணீர் தேங்கிவிட்டது எனப் போடுகிறார்கள். எல்லா மீடியாக்களும் இல்லை. ஏனென்றால், தி.மு.க. வளர்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதுதான் காரணம்.

அதனால்தான் இன்றைக்கு வர்றவன்லாம் புதுசுபுதுசா கட்சி தொடங்குறவன்லாம் தி.மு.க. அழியணும் ஒழியணும்கிற நிலையில்தான் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் சொல்லிக்கொள்வது இந்த ஆட்சியின் சாதனைகளை எண்ணிப் பாருங்கள். அண்ணா சொன்னதைப்போல வாழ்க வசவாளர்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

தேவையில்லாமல் யாருக்கும் பதில்சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. தேவையும் இல்லை. எங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram