தமிழ் நாடு

ஸ்ரீரங்கம் கோயிலில் மோதல்; எல். முருகன் கண்டனம்!

Staff Writer

இந்து கோயில்களை நிர்வகிக்க அறநிலையத் துறையே தேவையில்லை என்ற பா.ஜ.க.வின் கோரிக்கையை ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் சம்பவம் மீண்டும் மெய்ப்பிப்பதாக மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்வுடன் தொடங்கியது. இதனால் நேற்று மாலைக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது என்று அறிவிக்கப்பட்டதால், கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்த ஆந்திராவைச் சேர்ந்த 34 பேர் சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்ததால், அவர்களில் சிலர் ’கோவிந்தா கோவிந்தா’ என கோஷம் எழுப்பி அங்கிருந்த உண்டியலை தட்டி தாளம் போட்டுள்ளனர். அப்போது கோயில் பணியாளர்கள், அவர்களைக் கண்டித்துள்ளனர். இதனால், அவர்களுக்கும் கோயில் பணியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில், ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் சென்னாராவ், ராம் என்ற இருவர் காயம் அடைந்தனர். ஒருவருக்கு மூக்கு உடைந்து காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இருதரப்பும் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டதுக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“கோவில் வளாகத்தில் இப்படி பக்தர் ரத்தம் சிந்தியது பெரும் வருத்தத்திற்குரியது. கோயில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜை நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவத்திற்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்து கோயில்களை நிர்வகிக்க அறநிலையத் துறையே தேவையில்லை என்ற பாஜகவின் கோரிக்கையை இதுபோன்ற சம்பவங்களால் மீண்டும் மெய்ப்பித்து வருகின்றன” என இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.