நிவாரண தொகை வழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
தமிழ் நாடு

மிக்ஜம் புயல் நிவாரணம்: ரூ.6000 வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார் முதல்வர்!

Staff Writer

மிக்ஜம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மிக்ஜம் புயல், மழை - வெள்ளாதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதற்கான டோக்கன்கள் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், புயல் வெள்ள நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்கும் பணியை இன்று சென்னை வேளச்சேரியில் உள்ள விஜயலட்சுமி நகர் நியாயவிலைக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் டோக்கன்கள் பெற்ற அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடங்கியது.

டோக்கன் பெற்ற அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் டிசம்பர் 22 ஆம் தேதிக்குள் நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.1,455 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.