கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 
தமிழ் நாடு

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்துக்கு சிஇஒ நியமனம்!

Staff Writer

கிளாம்பாக்கத்தில் பயணிகளுக்கு சிக்கல் எதுவும் இன்றி பேருந்துகள் இயக்கப்படுகிறதா? வசதிகள் முறையாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய சிஇஒ நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கலை கொண்டாட நேற்றே பயணத்தை தொடங்கிவிட்டனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. புதிதாக கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய வசதிகள் செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதனிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சிஇஒ நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையரக இணை இயக்குநர் பார்த்தீபன் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய சிஇஒ-வாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிளாம்பாக்கத்தில் பயணிகளுக்கு சிக்கல் எதுவும் இன்றி பேருந்துகள் இயக்கப்படுகிறதா? வசதிகள் முறையாக உள்ளதா? என்பது உள்ளிட்ட பணிகளை அவர் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.