மத்திய சென்னை, புரசைவாக்கம் பகுதி மக்கள் போராட்டம் 
தமிழ் நாடு

மத்திய சென்னையில இப்படி செய்றீங்களே...!

Staff Writer

மத்திய சென்னைக்கு உட்பட்ட புரசைவாக்கம் பகுதியில் திடீர் நகர் மக்களுக்கு அளித்த உறுதிமொழிப்படி அதிகாரிகள் அந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை என மாநகராட்சி ஆணையரிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

புரசைவாக்கம் பிரிக்லின் சாலை, திடீர் நகர் பகுதியில் வீடுகளுக்கு குடிநீர், கழிவுநீர் இணைப்பு வழங்கவேண்டும்; மக்களுக்குத் தேவையான அளவுக்கு பொதுக் கழிப்பிடங்களும், அவை தூய்மையாகவும், சுகாதாரமாகவும், இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; திடீர் நகர் பகுதியில் தமிழ்நாடு நகரப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அடுக்குமாடிக் குடியிருப்பை விரைந்து கட்டித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்திவருகின்றனர். ஆனால், அரசுத் தரப்பில் இதைப் பொருட்படுத்தவே இல்லை என்றுகூறி, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8ஆம் தேதி சி.பி.எம். கட்சியின் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று, அப்பகுதி மாநகராட்சி துணை ஆணையர் ஆர்.லலிதாவிடம் நேரில் மனுவும் அளித்தனர். அவர், உடனடியாக சம்பந்தபட்ட சென்னை குடிநீர் வழங்கல் - கழிவுநீரகற்று வாரிய அதிகாரி, மாநகராட்சி 8ஆவது மண்டல அதிகாரிகளைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ஆனால், அப்படி குறைந்தபட்சம் அந்த  இடத்தைப் பார்வையிட்டு அடிப்படையான சுகாதார நடவடிக்கைகள்கூட மேற்கொள்ளப்படவில்லை என்று அப்பகுதியினர் அதிருப்தி அடைந்தனர். 

உயர் அதிகாரியிடம் மனு கொடுத்து நான்கு நாள்களாகியும் நடவடிக்கையும் எடுக்காததால், இன்று மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணனிடம் சி.பி.எம். கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் அப்பகுதி பிரதிநிதிகள் மீண்டும் மனு அளித்தனர். இராதாகிருஷ்ணனும் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். 

தலைநகரின் முக்கியப் பகுதியில் எப்போது நடவடிக்கை எடுப்பார்களோ என மக்கள் ஏங்கித் தவிக்கிறார்கள்.