பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடிய 138 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா், ஏகனாபுரம் உள்பட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகானாபுரம் கிராம மக்கள் கடந்த 433 நாள்களாக இரவு நேரங்களில் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, புதிய விமான நிலையத் திட்டத்தால் நீர்நிலைகள் பாதிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினா் இரண்டாவது முறையாக பரந்தூா் விமான நிலையம் அமைய உள்ள பகுதிகளில் நேற்று ஆய்வு செய்ய வந்தனா். இவா்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 130 பேரை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஆனாலும், சாலை மறியலில் ஈடுபட்ட 138 பேர் மீது சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது முதல்முறையாக வழக்கு பதியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.