முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
தமிழ் நாடு

திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முடியாது! – முதல்வர் ஸ்டாலின்

Staff Writer

திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுகவின் 75ஆவது ஆண்டு பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

“அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் அவர் உருவாக்கிய இயக்கத்தின் பவள விழாவை நான் நடத்திக்கொண்டிருக்கிறேன். இது திமுகவிற்கும், அண்ணாவிற்கும் கிடைத்துள்ள பெருமை. அண்ணா வழியில் தமிழ்நாட்டை வழிநடத்தியவர் கலைஞர். தி.மு.க. என்ற மூன்றெழுத்தில் உயிர் அடங்கியுள்ளது.

தமிழகத்தில் நாம் அமைத்த கூட்டணியை பார்த்துதான் இந்தியா கூட்டணி உருவானது. சில கூட்டணி தேர்தல் சமயத்தில் மட்டும்தான் உள்ளது. தேர்தல் முடிந்தால் கூட்டணியே முடிந்துபோய் விடுகிறது. ஆனால் திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முடியாது. திமுக கூட்டணியில் மோதல் வராதா? பகைமையை வளர்க்க முடியாதா என சிலர் நினைக்கின்றனர். திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுத்த சிலர் அவதூறு பரப்பி விஷம வேலைகளை செய்தனர். பாசிசத்தை வீழ்த்தவே ஒன்றிணைந்து உள்ளோம். திமுக கூட்டணியில் மோதல் வராது. திமுக கூட்டணியில் வெற்றியை கண்டு எதிரிகளுக்கு பொறாமை.

திமுகவின் அடிப்படையாக இருப்பது சமுதாயத்தில் சீர்திருத்தம். சமத்துவம். அரசியலில் ஜனநாயகம். இதை உருவாக்கத்தான் திமுக தோன்றியது. இதை நிறைவேற்றிக் காட்ட கட்சியும் ஆட்சியும் செயல்படுகிறது.

இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை. நாடாளுமன்றத் தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியவில்லை. நடந்து முடிந்த மக்களவை தேர்தலை கூட 7 கட்டங்களாக நடத்தி முடித்தனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் மாநிலங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்.

திமுக கூட்டணி அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை பெற்று வருகிறது. அண்ணா, கலைஞர் வழியில் திராவிட மாடல் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். மாநில சுயாட்சியை மீட்டெடுக்க உறுதியேற்போம்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் வருகை தந்து உரையாற்றினர். இந்த பொதுக்கூட்டத்தில் திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.