கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் வரும் நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலையில் தாக்கல் செய்து, அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அதன்படி,
* குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை எய்திடும் வகையில் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் எட்டு இலட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். முதற்கட்டமாக, 2024-25 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் 3.50 இலட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும். ஏழை, எளிய மக்கள் தங்கள் கனவு இல்லங்களை பயனாளிகள் தாங்களே உருவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பளிக்கும் வகையில் வரும் நிதியாண்டில் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்ற புதிய திட்டத்தின் மூலம் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் வறியநிலையில் உள்ள சுமார் ஐந்து இலட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழங்கி, விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திட அரசு உறுதியாக உள்ளது.