கறிக்கோழி வளர்ப்புக்கு ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சக் கூலியாக ரூ.12 நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
விழுப்புரத்தில் நேற்று நடைபெற்ற இச்சங்கத்தின் மாநில மாநாட்டில், இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அகில இந்திய கிசான் சபா இணைச்செயலாளர் டி.ரவீந்திரன் மாநாட்டைத் தொடங்கிவைத்தார். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் என். சுப்ரமணி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, கர்நாடகா கறிக்கோழி வளர்ப்பு சங்கத் தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் உட்பட பலரும் பேசினர்.
பதினைந்து மாவட்டங்களிலிருந்து கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர்.
மாநாட்டில்,
”வட்டிக்குக் கடன் வாங்கி பண்ணை அமைத்து கறிக்கோழி வளர்த்து நிறுவனங்களுக்குத் தரும் விவசாயிகளுக்கு வளர்ப்புக் கூலி கட்டுபடியாவதில்லை. குடும்ப உழைப்புக்கான கூலிகூடக் கிடைப்பதில்லை. பண்ணை விவசாயிகளுக்கு ஒரு கிலோ குறைந்தபட்ச வளர்ப்புக் கூலியாக நிறுவனங்கள் ரூ.12 வழங்க வேண்டும்.” என்றும்,
”விவசாயிகளுக்குப் பாதுகாப்பாக, நிறுவனங்களும் பாதிக்காதபடி கறிக்கோழி வளர்ப்புக்கான ஒப்பந்த சரத்துக்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.” என்றும்,
”கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு காப்பீடு செய்யவேண்டும். பண்ணைகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கவேண்டும்.” என்றும்,
”தேசியமயம் ஆக்கப்பட்ட வங்கிகள் தேவையான வங்கிக் கடனை விவசாயிகளுக்கு வழங்கவேண்டும். அரசு மானியங்களை வழங்கவேண்டும். வெயில் காலத்தில் ஒரு கோழி வளர்ப்புக்கு நிறுவனங்கள் ஐந்து ரூபாய் போனஸ் வழங்கவேண்டும்.” என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் புதிய தலைவராக டீ.ஏழுமலை, பொதுச்செயலாளராக கே.பி.பெருமாள், பொருளாளராக ஆர்.செந்தில்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.