மாதிரிப் படம் 
தமிழ் நாடு

இளைஞர்களே உஷார்... வெளிநாட்டு வேலையா? - இதையெல்லாம் சரிபாருங்க!

Staff Writer

லாவோஸ், கம்போடியாவில் வேலை வாய்ப்புக்கு செல்லும் தமிழக இளைஞர்கள் மோசடி வலையில் சிக்கைக் கொள்ள வேண்டாம் என அயலகத் தமிழர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் பா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமீபகாலமாக, தாய்லாந்து வழியாக லாவோஸ் நாட்டுக்கு தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகளை சந்தைப்படுத்தும் பணி என தமிழக இளைஞர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். நம்பி செல்லும் இளைஞர்கள் சட்டவிரோதமாக தாய்லாந்து எல்லை வழியாக லாவோஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, லாவோஸில் உள்ள ‘ கோல்டன் டிரையாங்கிள்’ என்ற சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கடுமையான மற்றும் கட்டுப்பாடான நிலைமைகளின் கீழ் பணிபுரிய சிறைபிடிக்கப்படுகின்றனர்.

இதுபோன்ற மோசடி வலையில் இளைஞர்கள் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கை உணர்வுடன், ஆட்சேர்ப்பு முகவர் மற்றும் வேலை செய்யவிருக்கும் நிறுவனத்தை பற்றி நன்றாக விசாரித்து பணிக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது. மேலும் வேலைக்கான விசாவின் உண்மைதன்மை மற்றும் முறையான பணி ஒப்பந்தம் (Work Permit) குறித்து பயணிப்பதற்கு முன் பணிபுரிய செல்ல உள்ள நாட்டிலுள்ள இந்திய தூதரகம் அல்லது இந்தியாவிலுள்ள அந்நாட்டின் தூதரகம் மூலம் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டும்.

லாவோஸ் மற்றும் கம்போடியாவில் வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை லாவோஸ் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தின் தொலைபேசி எண் 856-2055536568, மின்னஞ்சல் ons.vientianne@mea.gov.in மற்றும் கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்தின், மின்னஞ்சல் cons.phnompehh@mea.gov.in. visa.phnompehh@mea.gov.in ஆகியவற்றின் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

மேலும், இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண, தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 18003093793 (இந்தியாவுக்குள்), 8069009901 ( வெளிநாடுகளில் இருந்து) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். 8069009900 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் தரலாம். மேலும், சென்னையில் உள்ள குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலரை (Protector of Emigrants, Chennai) 90421 49222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தமிழகத்தில் மத்திய அரசில் பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள், முகமைகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.