மனுதர்மக் கோட்பாடுகளை எதிர்த்த ஐயா வைகுண்டரைப் பற்றிஆளுநர் இரவி தவறாகப் பேசியுள்ளதாக வைகுண்டரின் அய்யாவழி மடத்தின் தலைமைப்பதி பால பிரஜாபதி அடிகளார் கூறியுள்ளார்.
ஆளுநர் மாளிகையில் நேற்று பேசிய ஆர்.என். இரவி ஐயா வைகுண்டர் விஷ்ணுவின் அவதாரம் எனவும் சனாதன தர்மத்தில் ஒன்றியவர் என்பதாகவும் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் அய்யா வழிதலைமைப்பதியின் கருத்து பரவலாக எதிர்பார்ப்புக்கு உள்ளானது. அதையடுத்து இன்று காலையில் குமரியில் செய்தியாளர்களைக் கூட்டிப் பேசிய பாலபிரஜாபதி அடிகளார், ஆளுநரின் பேச்சைக் கண்டித்தார்.
அப்போது, “ வரலாறு தெரியாமல் வாய்திறக்கக்கூடாது. வைகுண்டசாமியை 24 வருடம் குறைத்துப் போட்டிருக்கிறார்கள். இது அவரின் 192ஆவது அவதார தினம். நாங்களெல்லாம் அறியாமல் கொண்டாடவில்லை. அவர் வலுவாகப் பிறந்து 24 ஆண்டுகள் வாழ்ந்து, திருமணம் முடித்து, நன்மக்களைப் பெற்று, தன்னுடைய குலத் தொழிலைச் செய்து மக்களோடு மக்களாக வாழ்ந்தார். வாழ்கிறபோது அநியாயங்கள் இவர்களை சாதியத்தால் ஏவப்பட்ட அடக்குமுறை, திருவிதாங்கூர் அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளை எதிர்த்துக் குரல்கொடுத்தார்.
அதுபோல அவர் தவமிருந்து தெய்வ நிலையை உண்டாக்கி, ஆரிய சமயங்களான மனுதர்மம் கோட்பாடுகளை எதிர்த்தார். மனிதன் சமத்துவன். அது ஒரு ஒக்க இனம்போல... சாதி பந்தினெட்டாய் வகுத்தானே நீசன்.. யார் நீசன்.. கலி... சாதியை எவன் பேசுகிறானோ சாதி எங்கே இருக்கிறதோ அது கலி கலியின் கூடம். விவேகானந்தர் சொன்னாரே, திருவிதாங்கூர் பேய்கள் குடியிருக்கிற கூடாரம் என்று... ஏன் தெய்வத்தைச் சொன்னாரு... சமத்துவம் இல்லாத இடம்... கடவுளுக்கு முன்னால அனைவரும் சமம்ங்க... சும்மா ஏதோ ஆரியர்கள் இங்கே வந்தாங்க... நம்முடைய பண்டைய வரலாறுகளை எல்லாம் அடக்குமுறை செய்து ஒடுக்கி கோயில்களைத் தமதாக்கிக்கொண்டு அவர்கள் நம்முடைய மக்கள் 80 சதவீதமான இந்த மண்ணின் மைந்தர்ளை அடிமைகளாக வைத்துக்கொண்டார்கள். அந்த மதத்தை நம்பி இவன் ஏமாந்துபோனான். அதை இன்னும் கடைப்பிடிக்க வேண்டுமெனச் சொல்வது காணாது.
ஆளுநர் சொன்னது வரலாற்றுப் பிழை. இதைச் செய்வதா ஆளுநரின் வேலை? அவருக்கு நிறைய வேலை இருக்கிறது, அதைச் செய்யலாம். தமிழர்களுக்காக தமிழ்நாட்டின் மேன்மைக்காக நல்ல ஆலோசனை சொல்லலாம். ஏன் எங்களை வம்புக்கு இழுக்கிறார்? இவரின் வேலையே இதுவாகப் போனால் தமிழ்ச் சமுதாயம் மன்னிக்காது. நாங்களும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எப்படி முடியும்ங்க?
எங்க ஐயா சொன்னாரு... மாடு மண் குதிரையை வணங்கி நில்லாதே... பூரணம் உடைக்காதே... ஓம சாந்தி செய்யாதே... எல்லாம் வேண்டாம்னார்... புனஸ்காரமும் இல்லை பூஜை முறையும் இல்லை. எல்லாரும் சமமா வாழ்வதும் ஆணும்பெண்ணும் சமமா அனைத்து சாதியினரும் அய்யாவினுடைய பிள்ளைதான்... எனவே, சாதி என்பது மனிதரை மனிதர் பிரிக்கும் பேதமை, அதுவே கலி.” என்று பாலபிரஜாபதி அடிகளார் கூறினார்.