செந்தில் பாலாஜி சிறையிலிருந்து வெளியே வந்துள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் அவர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் உதயநிதி துணைமுதலமைச்சராகப் பதவியேற்கிறார்.
அமைச்சர்கள் மஸ்தான், மனோ தங்கராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஆவடி நாசரும் மீண்டும் பதவியைப் பெறுகிறார்.
புதிதாக, அரசு கொறடாவாக இருக்கும் கோவி.செழியனும் சேலம் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனும் அமைச்சர்களாக ஆகின்றனர்.
நாளை பிற்பகல் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நடைபெறும்.
இதைப்போல உயர்கல்வித் துறை பொன்முடியிடமிருந்து மாற்றப்பட்டுள்ளது. அவருக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துறையை கவனித்துவரும் மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆதிதிராவிடர் துறை அமைச்சர் கயல்விழிக்கு மனிதவள மேம்பாடு வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் துறை மெய்யநாதன் பிற்பட்டோர் துறைக்கும், அதை கவனித்துவந்த ராஜகண்ணப்பன் பால்வளத்துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
தங்கம் தென்னரசிடமிருந்த மனிதவளத்துறை நீக்கப்பட்டு, சுற்றுச்சூழல் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.