தொழிற்சங்க நிர்வாகிகளை கைது செய்யும் காவல் துறை 
தமிழ் நாடு

சாம்சங் தொழிலாளர்கள் இரவோடு இரவாக கைது… எமர்ஜென்சி காலமா இது? - கொதிக்கும் தொழிற்சங்கத்தினர்!

Staff Writer

சாம்சங் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்பத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தின் பணியாற்றும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக சாம்சங் நிறுவனத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சுங்காசத்திரம் அருகே பெரிய திடல் அமைத்து தொழிலாளர்கள் அமர்ந்து போராடி வருகின்றனர். 25 நாட்களுக்கு மேலாக நடந்து வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு விட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசு சார்பிலும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் போராட்டம் தீவிரமடைந்து கொண்டே தான் செல்கிறது. காஞ்சிபுரம் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வரும் 21ஆம் தேதி நான்கு மாவட்டங்களில் அனைத்து ஆலைகளின் ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சிஐடியு அறிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் போராட்டத்திற்காக டாடா ஏசி வாகனத்தில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென விபத்து ஏற்பட்டு வாகனம் கவிழ்ந்தது. இதில் தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்து வந்த போலீசார் வாகனத்தை அகற்றி போக்குவரத்தை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தள்ளிவிட்டதாகவும், வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் பலரை அவர்களது வீடுகளுக்கே சென்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர் உள்ளிட்ட விவரங்கள் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையில் போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் கலைக்கப்பட்டிருக்கிறது.

எமர்ஜென்சி காலமா?

இதுதொடர்பாக சிபிம் செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில், ”சாம்சங் தொழிலாளர் சங்கத் தலைவர்களை இந்த இரவு நேரத்தில் வீடு புகுந்து கைது செய்யுமளவிற்கு என்ன நடந்துவிட்டது. எமர்ஜென்சியா? முன் எப்போதும் எதிர்கொள்ளாத சோதனை இது எனக்” குறிப்பிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram