சென்னை பெரம்பூரில் நேற்று மாலை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் சராமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தான் கட்டிவரும் புதிய வீட்டைப் பார்க்கச் சென்றபோது, உணவு சப்ளை செய்யும் ஊழியர்கள் போல் சீருடை அணிந்த சிலர் திடீரென இவரைத் தாக்கினர். மருத்துவமனை கொண்டு சென்றபோது ஏற்கனவே உயிரிழந்ததாக கூறப்பட்டது.
வட சென்னையில் முக்கியப் புள்ளியான இவரது கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக ஆற்காடு சுரேஷ் என்பவரின் சகோதரர் ஆற்காடு பாலு உள்ளிட 8 பேர் அண்ணா நகர் கே 4 காவல்நிலையத்தில் துணை ஆணையர் ஸ்ரீனிவாசன் முன்னிலையில் சரண் அடைந்துள்ளனர்.
ஆர்ம்ஸ்ட்ராங் 52, சட்டக்கல்லூரியில் படித்தவர். புரசைவாக்கம் ரங்கநாதனுடன் நெருக்கமாக இருந்தவர். 2006-இல் சென்னை மாநகராட்சி சுயேச்சை கவுன்சிலராகத் தேர்வானவர். பின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநிலத் தலைவர் ஆனார். இவர் மீதும் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடப்பதாக வட சென்னை இணை ஆணையர் அஸ்ரா கார்க் கூறி உள்ளார்.
யார் இந்த ஆற்காடு சுரேஷ்?
கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் வழக்கு தொடர்பாக, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகிய ரவுடி ஆற்காடு சுரேஷ் என்பவர் வேறு சிலருடன் பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதிக்கு உணவருந்தச் சென்றாராம். அப்போது, ஒரு கும்பல் ஆற்காடு சுரேஷை வெட்டிக்கொன்றது. அந்த வழக்கில் ஒன்பது பேர் சரணடைந்தனர்.
அந்த சுரேசுக்கும் ஆம்ஸ்ட்ராங் தரப்புக்கும் பிணக்கு இருந்ததாகவும் அதனால் ஆற்காடு சுரேஷின் தம்பி ஆற்காடு பாலு என்பவர் அண்ணன் கொலைக்குப் பழிவாங்க, ஆர்ம்ஸ்ட்ராங்கைக் கொன்றிருக்கலாம் என காவல்துறை தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆற்காடு சுரேஷ் 90-களில் சென்னையைக் கலக்கிவந்த கூலிப்படைத் தலைவன் அப்புவின் கும்பலைச் சேர்ந்தவர். அப்பு திட்டமிட்டு செய்த காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் இவர் பெயர் அடிபட்டது. அந்த வழக்கில் சரணடைந்த கதிரவன் என்பவர் கொலையிலும் இவர் பெயர் அடிபட்டது. சுரேஷ் பெரிய ஆளாக உருவெடுத்தது அப்புவின் இன்னொரு தளபதியான பிரபல ரவுடி சின்னா என்பவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் வைத்து 2010-இல் கொன்ற சம்பவத்தில்.
இவர் சில ஆண்டுகள் கழித்து வட சென்னையில் இன்னொரு குழு தலைவரும் அரசியல் பிரமுகருமான தென்னன் என்பவரையும் கொலை செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதுபோல் ஏழெட்டு கொலை வழக்குகள், 40 குற்ற வழக்குகளில் தொடர்புடையவரான ஆற்காடு சுரேஷ் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
அந்தக் கொலைக்குப் பழிக்குப்பழி வாங்கல் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தப்படுகிறது.