தகுதியின் அளவுகோலாக கருதப்படும் நீட் தேர்வு, சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் பாதிக்கும் ஒரு பரவலான மோசடி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;
நீட் தேர்வு தொடர்பாக நடந்து வரும் சர்ச்சைகள் அதன் அடிப்படையில் சமத்துவமின்மையை எடுத்துக்காட்டுகின்றன. சமுதாயத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு வரும், ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். மாறாக, அத்தகைய மாணவர்களின் வாய்ப்பை நீட் தடுக்கிறது.
தேசிய தேர்வு முகமைக்கு (NTA) மத்திய கல்வி அமைச்சர் ஆதரவாக பேசியுள்ள போதிலும், சமீபத்திய நிகழ்வுகள் வித்தியாசமான படத்தை வரைகின்றன. பல கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் மற்றும் எட்டு வெற்று காசோலைகளுக்காக ஓ.எம்.ஆர். தாள்களை கண்காணிப்பாளர்கள் சேதப்படுத்தியதாக குஜராத் காவல்துறை எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. ஒரு பள்ளி முதல்வர், ஒரு இயற்பியல் ஆசிரியர் மற்றும் பல நீட் பயிற்சி மையங்கள் சம்பந்தப்பட்ட இந்த சதி, முறையான மாற்றத்திற்கான அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தியாகி அனிதா முதல் எண்ணற்ற மாணவர்கள் வரை பரிதாபகரமாகத் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதை நாம் நேரில் பார்த்திருக்கிறோம்.
தகுதியின் அளவுகோலாக கருதப்படும் நீட் தேர்வு, சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் பாதிக்கும் ஒரு பரவலான மோசடியாக மீண்டும் மீண்டும் தன்னை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாணவர் விரோத, சமூக நீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.