அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற விழாவுக்கு மாணவர்கள் வந்தால் தான் வருகைப்பதிவு என சுற்றறிக்கை வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், “இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் காரணம். நாட்டின் தேச தந்தை நேதாஜிதான்” என ஆளுநர் ஆர்.என். பேசியதும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். அதேபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், ஆளுநர் விழாவுக்கு வந்தால்தான் மாணவர்களுக்கு வருகைப்பதிவு என அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி இருப்பது சர்ச்சையாகியுள்ளது.
இது குறித்து விளக்கமளித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறுகையில்,
“மாணவர்கள் வருகை குறித்து நாங்கள் பதிவு செய்யவில்லை. அப்படி சொன்னால் மட்டுமே நிகழ்ச்சிக்கு வருவார்கள் என்று சொல்லியிருந்தோம். மாணவர்கள் நாட்டுப்பற்றை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது” என தெரிவித்தார்.
அதேபோல், நிகழ்வில் ஆளுநர் பேசிய பேச்சும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நிகழ்வில் ஆளுநர் ரவி பேசியதாவது, “இந்திய தேசிய ராணுவத்தின் கடற்படை மற்றும் விமானப்படையின் புரட்சியே இந்தியாவின் சுதந்திரத்திற்கு காரணம். கலாச்சார சின்னமாகவும், ஆன்மீக சின்னமாகவும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் விளங்குகிறார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் இந்திய ராணுவ படையில் தான் தமிழர்கள் அதிகளவு நிறைந்திருந்தனர். வேலு நாச்சியார், வ.உ.சி போன்றவர்களை போல நேதாஜியின் தியாகம் போற்றப்பட வேண்டியவை. சுதந்திரத்திற்காக போராடிய தமிழ்நாட்டு வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. வேலு நாச்சியார், வ.உ.சி போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகத்தையும் போற்ற வேண்டும். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவு படையின் கட்டமைப்புக்கு பின் பல தலைமுறைகளுக்கு பிறகே இந்திய ராணுவத்தில் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் சுதந்திரத்தை பொறுத்த அளவில், இந்திய தேசிய காங்கிரஸின் ஒத்துழையாமை இயக்கம் ஆங்கிலேயரை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதற்கான காரணமில்லை என இங்கிலாந்து முன்னாள் பிரதமர் அட்லீ பதிவு செய்துள்ளார். மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் பலன் அளிக்கவில்லை. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் காரணம். நாட்டின் தேச தந்தை நேதாஜிதான்" என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே ஆளுநர் பேசிய பல விஷயங்கள் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரமும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.