52 ஆயிரம் விடைத்தாள்களைத் திருத்த 9 மாதங்களை எடுத்துக்கொள்வதா? டிஎன்பிஎஸ்சி தொகுதி- 2 முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழக அரசுத் துறைகளில் தொகுதி 2, 2 ஏ பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட போட்டித் தேர்வுகளின் முடிவுகள் இன்று வரையிலும் வெளியிடப்படவில்லை. தமிழக அரசின் முக்கியப் பணிகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
”தமிழ்நாடு அரசு இரண்டாம் தொகுதி 121 பணியிடங்கள், 5,097 தொகுதி 2ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாள் வெளியிடப்பட்டு, 9.94 லட்சம் பேர் கடந்த ஆண்டு மே 21ஆம் நாள் முதனிலைத் தேர்வை எழுதினார்கள். அவர்களில் 52,180 பேர் முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பான்மையினர் கடந்த பிப்ரவரி 25ஆம் நாள் நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வுகளை எழுதினர். அத்தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிடப் படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9 மாதங்களாகியும் இன்று வரை வெளியிடப்படவில்லை.” என்றும்,
”முதன்மைத் தேர்வை எழுதியவர்கள் வெறும் 52,000 பேர் மட்டும் தான். முதன்மைத் தேர்வில் ஒவ்வொரு போட்டியாளரும் 2 தாள்களை எழுத வேண்டும்; அதன்படி மொத்தம் 1.04 லட்சம் விடைத்தாள்களை திருத்த வேண்டும். அவை அனைத்தும் இரண்டே வகைப்பட்டவை தான். அவற்றை மிக எளிதாக திருத்தி விட முடியும். ஆனாலும், அப்பணியை அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்யவில்லை.”என்றும்,
”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 2 பணிகளுக்கு முதன்மைத் தேர்வு நடத்தி 7 மாதங்கள் கழித்து கடந்த செப்டம்பர் மாத இறுதியில் தான், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளை நடத்தியது. அந்தத் தேர்வுகளில் 14,624 தேர்வர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் 9 தாள்களை எழுதினார்கள். அதன்படி, மொத்தம் 1 லட்சத்து 34,616 தாள்கள் திருத்தப்பட வேண்டும். அந்த தாள்கள் மொத்தம் 4 வகையானவை. அனைத்துத் தாள்களையும் அக்டோபர் மாதத்தில் திருத்தி கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி முடிவை அறிவித்திருக்கிறது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம். ஆனால், அதைவிட குறைவான பணிச்சுமை கொண்ட தொகுதி 2 முதன்மைத் தேர்வுகளின் முடிவுகளை 9 மாதங்களாகியும் வெளியிட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். இதிலிருந்தே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாட்டு வேகத்தை மக்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
தேர்வர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொகுதி 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட வேண்டும்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.