மாற்றுத்திறனாளி 
தமிழ் நாடு

தேர்தலைக் காட்டி 7 இலட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தம்?

Staff Writer

தேர்தலைக் காரணம் காட்டி மாற்றுத் திறனாளிகள், சமூகப்பாதுகாப்பு உதவித் தொகை திட்ட உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது என்றும் இது அரசுக்கு கெட்ட பெயர் உருவாக்கும் நோக்கம் கொண்டது என்றும் பிரச்னை எழுந்துள்ளது. 

 

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி மாற்றுத்திறனாளிகள், முதியோர் உட்பட்டோருக்கு  வழங்கப்படும் உதவித்தொகை மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளன; இதனால், அவர்கள் பெரும் பாதிப்பில் உள்ளனர் என்று புகார் கூறப்படுகிறது.  

தமிழகத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் இயக்குநரகத்தால் இரு வேறு திட்டங்கள் மூலம் அனைது வகை மாற்றுத் திறனாளிகள் சுமார் 4.5 லட்சம் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் மனவளர்ச்சி குன்றியவர்கள், 75% மேல் பாதிக்கப்பட்ட கடும் உடல் ஊனமுற்றோர் உட்பட்ட 5 வகை மாற்றுத் திறனாளிகளுக்கு சுமார் 2.5 லட்சம் பயனாளிகளுக்கு மாதம் ரூ.2,000/- உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேற்கண்ட இரு துறைகள் சார்ந்த உதவித்தொகைகளும் மாதந்தோறும் 5ஆம் தேதிக்குள் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும்.  ஆனால், ஏப்ரல் மாதத்தில் 10 ஆம் தேதி ஆகியும் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் உதவித்தொகைகள் பட்டுவாடா செய்யப்படவில்லை என மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பாக, மாவட்டங்களில் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது, தேர்தல் நடத்தை விதிகளையும், பணிகளையும் காரணமாகக் கூறுவதாகச் சொல்லப்படுகிறது என்றும் இதனால், மாற்றுத்திறனாளிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்; மேலும், தேர்தல் நேரத்தில் தமிழக அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்க அதிகாரிகள் முயல்கின்றனரோ எனக் கருதுகின்றனர் என்றும் எனவே, நடைமுறையில் உள்ள மாதாந்திர உதவித்தொகைத் திட்டத்தை தேர்தலைக் காரணம்காட்டி நிறுத்தி வைக்காமல், உடனடியாக பட்டுவாடா செய்ய தலைமைச் செயலாளர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 

அச்சங்கத்தின் தலைவர் தோ.வில்சன், பொதுச்செயலாளர் பா.ஜான்சிரானி ஆகியோர் இன்று வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.