டாஸ்மாக் மதுக் கடை 
தமிழ் நாடு

சரக்கு, மறப்பு... சாப்பிடுவது எத்தனை கோடி?!

Staff Writer

தமிழ்நாட்டு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் மது விற்பனை வழியாக கடந்த ஆண்டில் 46 ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் தேதி சட்டப்பேரவையில் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் முத்துசாமி அரசின் கொள்கைக்குறிப்பில் இதைத் தெரிவித்துள்ளார். 

தமிழக அரசுக்கு மது விற்பனையில் ஆயத்தீர்வை மற்றும் விற்பனை வரி மூலம் கடந்த 2003-ம் ஆண்டில் ரூ.3 ஆயிரத்து 639 கோடியே 93 லட்சம் வருவாய் கிடைத்தது. ஆனால் கடந்த 2023-24-ம் நிதியாண்டில் ரூ.45 ஆயிரத்து 855 கோடியே 67 லட் சம் வருமானம் கிடைத்து உள்ளது. கடந்த 2022-23-ம் நிதியாண்டில் ரூ.44 லட்சத்து 121கோடியே 13 லட்சம் வருவாய் வந்துள்ளது. அதன்படி முந்தைய ஆண்டினைவிட கடந்தாண்டு ரூ.1,734 கோடியே 54 லட்சம் வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் மது விற்பனையைக் குறைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், சில அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் குடிநோய் பாதிப்பு அதிகரித்தபடியே செல்கிறது. எனவே, போதையை மறக்கடிக்கச் செய்வதற்கான மையங்கள் பெருகிவருகின்றன. அரசுசார்பிலும் இத்தகைய மையங்களை அமைக்கவேண்டும் எனும் கோரிக்கை நீடித்துவருகிறது.

இந்நிலையில் நேற்று சுகாதாரத் துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தில் துறையின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட ஓர் அறிவிப்பில், "மாநில அளவில் 25 அரசு மருத்துவமனைகளில் சிறப்பு போதைப் பழக்க மீட்பு மையங்களை நிறுவி மது போதைப் பொருள்களால் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான மனநல ஆலோசனை, மருத்துவ சிகிச்சை, அதனுடன் புணர்வாழ்வு சேவைகள் 20 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனிடையே, குடிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுக்கு 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. நடப்பு நிதியாண்டில் இந்தத் தொகை 5 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று மதுவிலக்கு ஆயத்தீர்வை மானியக் கோரிக்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.