உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுகவினர் 
தமிழ் நாடு

பயமா ஸ்டாலின்...? - விடாமல் துரத்தும் எடப்பாடி!

Staff Writer

“கள்ளச்சாராய மரணங்கள் 60-ஐ தாண்டியுள்ள நிலையில், இன்றுவரை கள்ளக்குறிச்சி சென்று மக்களை சந்திக்காதது ஏன்? பயமா ஸ்டாலின்?” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இருப்பினும், கள்ளச்சாராயம் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடமும் மனு அளித்துள்ளனர்.

இந்த நிலையில், கள்ளச்சார மரணங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததை கண்டித்தும், கள்ளக்குறிச்சி மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அ.தி.மு.க.வினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவல் துறை அனுமதியுடன், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தின் அருகில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

காலை 9 மணியளவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கறுப்பு சட்டையுடன் போராட்ட பந்தலுக்கு வந்தார்.

அ.தி.மு.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழும்புர் ருக்மணி லட்சுமிபதி சாலையின் ஒரு புறத்தில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும், மறுபுறம் வாகனங்கள் செல்ல இடம் அளிக்க வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளுடன்தான் காவல்துறை அனுமதி வழங்கியது. ஆனால் தொடர்ந்து அந்த பகுதியில் கூட்டம் அதிகரித்து வருவதால், விரைவில் அந்த சாலை மூடப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து எனது தலைமையிலான கழக சட்டமன்ற உறுப்பினர்கள் நேர்மையான விவாதம் நடத்தப் பல முறை சட்டமன்றத்தில் முயன்றும் விடியா திமுக முதல்வர் தயங்குவது ஏன்?

கள்ளச்சாராய மரணங்கள் 60-ஐ தாண்டியுள்ள நிலையில், இன்றுவரை கள்ளக்குறிச்சி சென்று மக்களை சந்திக்காதது ஏன்? பயமா ஸ்டாலின் ? கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரிப்பதோடு, இதற்கு பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதால், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத் தொடர் முழுவதும் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.