“வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பான முடிவை எடுத்துள்ளோம்” என்று தே.மு.தி.க அவைத் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க. – அ.தி.மு.க. இடையேயான முதல் கட்டப் பேச்சுவார்த்தை கடந்த 1 ஆம் தேதி நடைபெற்றது. சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் பிரேமலதாவை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், பெஞ்சமின் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமையகத்தில் இரு கட்சிகளின் குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தே.மு.தி.க. அவைத் தலைவர் இளங்கோவன், மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. உடனான கூட்டணியை உறுதிசெய்துள்ளதாக தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாகவும், அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையின்போது தொகுதிகள் எண்ணிக்கை பற்றி ஆலோசனை நடத்தப்படும் என்று இளங்கோவன் கூறினார்.