"ரெய்டு பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அ.தி.மு.க.வினர் பயப்பட மாட்டார்கள்" என்று அதிமுகவின் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று அதிமுகவின் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது: அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என்கிற நிலைப்பாட்டில் எந்த மாறுபாடும் இல்லை.
சென்னையில் நாளை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் இதைத் தவிர வேறு எதனையும் நான் சொல்வது சரியாக இருக்காது. நாளைய கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என அறிவித்த பிறகு டெல்லிக்கு அ.தி.மு.க. தலைவர்கள் சென்றது, தமிழகம் சார்ந்த பிரச்சனைகளுக்குத்தான். டெல்லிக்கு சென்றவர்களில் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் இருந்தனர். கூட்டணி குறித்து மத்திய அரசிடம் என்ன போய் பேசப் போகிறோம்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே அ.தி.மு.க. எத்தனையோ சோதனைகள், வழக்குகளை எல்லாம் பார்த்துவிட்டது. ரஜினிகாந்த் சொல்வதைப் போல... எங்களுக்கு மடியில் கனமில்லை. இந்த ரெய்டு போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம். எதையும் தீவிரமாக எதிர்கொள்வோம்” என்றார்.