தேர்தல் பத்திரம் மூலமாக பணம் வாங்காத ஒரே கட்சி அ.தி.மு.க.தான் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
“கடந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட 90 சதவீத அறிவிப்புகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. ஆனால் கூட்டங்களுக்கு செல்லும் அமைச்சர்கள் 95 சதவீத அறிவிப்புகளை நிறைவேற்றியதாக பொய் கூறுகின்றனர்.
சட்டப்பேரவையில் நான் எழுப்பிய கேள்விகள் எதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கவில்லை. தி.மு.க. அரசு அமைத்த 52 குழுக்கள் என்ன செய்கின்றன என வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தினோம். முதலீட்டாளர் மாநாடு குறித்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.
விலைவாசி உயர்வு குறித்து எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சரிடம் பதில் இல்லை, கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வேண்டும்.
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, செலவினம் குறித்த கேள்விக்கும் பதில் தரவில்லை. குருவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்தொகை கிடைக்கவில்லை. அத்தியாவசிய பொருட்களின் உயர்வு தொடர்பாக கேட்டதற்கு பதில் இல்லை. நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை திமுக இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவறான தகவலை அளித்து வருகிறார். எனது ஆட்சியில் 42 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்துத் திறந்துவைத்திருக்கிறேன். அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளன." என்று தி.மு.க. அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிசாமி முன்வைத்தார்.
தொடர்ந்து பேசியவர், “தினமலரில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒன்றாகிவிட்டது என்று செய்தி வெளியிட்டிருந்தார்கள். தோள் மேல் கை போட்டு மாதிரி. எங்களுக்கு எதிரி தி.மு.க.தான் . வேறு எந்த கட்சியும் கிடையாது. வேண்டும் என்றே எங்களை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தி.மு.க.வுக்கு எப்படி முரசொலியோ, அதே மாதிரிதான் பா.ஜ.க.வுக்கு தினமலர். ” என்றார்.
தேர்தல் பத்திரங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை எப்படி பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “எங்களுக்கு அந்த மாதிரி பணம் வரவில்லையே. அப்படி வந்தால்தானே தெரியும். அந்த வாய்ப்பு எங்களுக்கு இல்லை. தேர்தல் பத்திரம் மூலமாக பணம் வாங்காத ஒரே கட்சி அ.தி.மு.க.தான். இதற்கெல்லாம் தடைபோட்டால் தான் நாங்கள் எல்லாம் கட்சி நடத்த முடியும். நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்.” என்றார்.