அண்ணாமலை குறித்து விமர்சனம் செய்ய அ.தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை என தமிழக பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
2019-இல் மக்களவைத் தோ்தலில் அதிமுக, பாஜக - பாமக - தேமுதிக கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்து. அப்போது, அதிமுகவின் இரண்டாம்கட்டத் தலைவர்கள், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வி அடைந்தோம் என்றனர். 2021 பேரவைத் தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் விழுப்புரத்திலும், ஜெயக்குமார் சென்னை ராயபுரத்திலும் தோல்வி அடைந்தனர். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கவில்லை. அதனால்தான் தோற்றோம் என்றனர். இப்போது பாஜக இல்லாமல் போட்டியிட்ட அதிமுக வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தோற்றோம் என்று கூறிய அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் இப்போது, பாஜகவுடன் கூட்டணி வைக்காததால்தான் தோற்றோம் என்கின்றனர்.
திமுக எதிர்ப்பால் உருவான அதிமுக இப்போது திமுகவின் வெற்றிக்கு உதவும் வகையில் நடந்து கொள்கிறது. அதிமுக தலைவர்கள் திமுகவின் சதி வலையில் விழுந்துவிட்டனா்.
திமுகவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவுபவர்களுக்கு பாஜக அல்லது தமிழக பாஜக தலைவா் அண்ணாமலையை விமா்சிக்க எந்தத் தகுதியும் இல்லை என்று அவா் தெரிவித்துள்ளார்.