பிரக்ஞானந்தாவின் திறமையைக் கண்டு ஒட்டுமொத்த செஸ் உலகமே வியந்து நிற்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நார்வேயில் நடைபெற்று வரும் செஸ் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றுள்ள பிரக்ஞானந்தா உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை கடந்த சில தினங்களுக்கு முன்பு வீழ்த்தி இருந்தார். இதன் மூலம் அவர் 8 பேர் பங்கேற்கும் போட்டியில் முன்னிலை வகித்து வந்தார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் இரண்டாம் நிலை வீரரான ஃபேபியோனாவை அவர் வீழ்த்தியுள்ளார்.
நான்காவது சுற்றில் தோல்வி அடைந்த போதும், அவர் ஐந்தாவது போட்டியில் மீண்டு வந்து இந்த சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் உலகின் முதல் மற்றும் இரண்டாவது நிலை வீரர்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமைமிகு சாதனையை அவர் படைத்துள்ளார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’நார்வே செஸ் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள். முதல் 10 இடங்களுக்குள் வந்த பிரக்ஞானந்தாவை வரவேற்கிறோம். உலகின் முதல் நிலை வீரர் கார்ல்சன், இரண்டாம் நிலை வீரர் ஃபேபியானோவை வீழ்த்தியது வியத்தகு சாதனை. உங்கள் திறமையைக் கண்டு ஒட்டுமொத்த செஸ் உலகமே வியந்து நிற்கிறது’ என பதிவிட்டுள்ளார்.