அமைச்சர் உதயநிதி 
தமிழ் நாடு

குமுறிய மாணவர்; ஆறுதல் படுத்திய அமைச்சர் உதயநிதி!

Staff Writer

“இன்னும் எத்தனை அனிதாவை, ஜெகதீஷை நாங்கள் இழப்பது” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், மருத்துவ மாணவர் ஃபாயஸ் கேள்வி எழுப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன், நீட் தேர்வில் 2 முறை தோல்வியடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சோகம் மறைவதற்குள், அவருடைய தந்தை செல்வசேகர் தற்கொலை செய்து கொண்டார். குரோம்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அமைச்சர் உதயநிதி நேரில் சென்று மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் காரில் ஏறுவதற்காக வந்த அமைச்சர் உதயநிதியிடம் ஜெகதீஸின் நண்பர் ஃபயாஸ், “நீட்டை எதிர்த்து நம்மால் ஒன்றும் செய்ய முடியாதா? இன்னும் எத்தனை அனிதாவை, ஜெகதீஷை நாங்கள் இழப்பது.

ஒவ்வொரு முறையும் இதே கோரிக்கை தான் சார். பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு நீட், ஜேஇஇ என எத்தனை நுழைவுத் தேர்வு எழுதுவது. அதற்காக பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறோம் என்ற தெரியவில்லை.

எனக்கு வசதி உள்ளதால் நான் எம்பிபிஎஸ் படிக்க சேர்ந்துள்ளேன். என் நண்பனுக்கு வசதி இல்லை. அவனால் எம்.பி.பி.எஸ். சேர முடியவில்லை. பணம் தான் நீட் தேர்வில் பிரதானமாக உள்ளது. என் தந்தையால் கட்ட முடிந்தது. அவர்களால் முடியவில்லை. இப்போது நம்மிடம் ஜெகதீஸூம் இல்லை. அவரது தந்தை செல்வமும் இல்லை. ஆளுநருக்கு எதிராக எதாவது செய்யுங்கள்.” என ஆவேசமாக பேசினார்.

அவர் பேசி முடிக்கும் வரை பொறுமையாக கேட்ட உதயநிதி ஸ்டாலின், அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.