கடலூர் பா.ம.க. வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த நபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மக்களவைத் தொகுதியில் பா.ம.க. சார்பில் வேட்பாளராக களம் காண்கிறார் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான். தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவரும் அவர், வித்தியாச வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வருகிறார். அந்தவகையில், தங்கர் பச்சான் கடலூர் ஒன்றியம் தென்னம்பாக்கத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு இருந்த கிளி ஜோதிடரிடம் தங்கர்பச்சான் கிளி ஜோசியம் பார்த்தார். இதில் கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்று இருந்தது. இதற்கு மகிழ்ச்சி தெரிவித்த தங்கர்பச்சான், பின்னர் ஓட்டு கேட்க சென்றார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது பா.ம.க. வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ், கிளிகளை வளர்ப்பது குற்றம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 4 கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வனத்துறையின் இந்த கைது நடவடிக்கைக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தமிழ்நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கும் தி.மு.க. அரசு, ஓர் ஏழை கிளி ஜோதிடரை கைது செய்து அதன் வீரத்தைக் காட்டியிருக்கிறது. அந்த ஜோதிடரின் பிழைப்பில் மண்ணைப் போட்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.