மாணவர்கள் 
தமிழ் நாடு

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91. 17% தேர்ச்சி!

Staff Writer

பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று காலையில் வெளியானது. இதில், 91.17 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. 7,534 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். இவர்களுடன் சுமார் 5 ஆயிரம் தனித்தேர்வர்களும், 187 சிறைக் கைதிகளும் இந்தத் தேர்வை எழுதினார்கள்.

பன்னிரண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்புகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இன்று காலை 9:30 மணியளவில் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தேர்வுமுடிவை வெளியிட்டார்.

தமிழ்நாடு- புதுச்சேரியில் 11 ஆம் வகுப்பு தேர்வை எழுதிய சுமார் 8.11 லட்சம் பேரில் 7.39 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சிவீதம் 91.17%.

பெண் மாணவர்கள் 4.04 லட்சம் பேரும், ஆண் மாணவர்கள் 3.35 லட்சம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்பிள்ளைகளைவிட பெண் பிள்ளைகள் 7.43 % கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்ப் பாடத்தில் 8 பேர் 100க்கு100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்வில் 241 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

மாநில அளவில் கோவை மாவட்டம் தேர்ச்சியில் முதலிடம் பெற்றுள்ளது.