மேல்மா கூட்ரோடில் போலீஸ் குவிப்பு 
தமிழ் நாடு

7 விவசாயிகள் மீது குண்டர் சட்டம் : எதிர்ப்பு வலுக்கிறது!

Staff Writer

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட்டுக்கு எதிராக போடிய விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுத்திருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில் சிப்காட் 3ஆவது அலகை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, நர்மாபள்ளம், வீரம்பாக்கம் உட்பட்ட 11 கிராமங்களிலிருந்து 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான அரசாணை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வெளியிடப்பட்டது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகும் தொடர்ந்து அதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மேல்மா சிப்காட் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் 126 நாள்கள் போராட்டம் நடத்திவந்தனர். திடீரென அவர்கள் கடந்த 4 ஆம் தேதி நடைபயணம் செல்லமுயன்றபோது பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக 20 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி அருள், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்கியராஜ், சோழன், விஜயன் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு, அ.ம.மு.க. பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் முதலில் கண்டனம் தெரிவிக்க, தொடர்ந்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, நா.த.க. தலைவர் சீமான், பா.ம.க. தலைவர் அன்புமணி, மே பதினேழு இயக்கம் திருமுருகன் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தினகரன்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கப் பணிகளுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அண்ணாமலை

தமிழகம் முழுவதுமே தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு, அமைதியாகப் போராடும் திருவண்ணாமலை விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்து, இதற்கு மேலும் திமுக அரசால் தரம்தாழ்ந்து போகமுடியாது என்ற எங்கள் எண்ணத்தைத் தவறென நிரூபித்துள்ளனர். இந்த கோழைத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். போராடும் விவசாயிகளைப் பாதுகாக்க, அவர்கள் குடும்பங்களுக்கு முழு ஆதரவையும் சட்ட உதவியையும் பாஜக வழங்கும் என்ற உறுதியை அளிக்கின்றோம்.

சீமான்

அறவழியில் போராடும் மக்கள் மீது அதிகாரத்தைக் கட்டவிழ்க்கும் மக்களாட்சி முறைக்கு எதிரான போக்கை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும். வேளாண் விளை நிலங்களைக் கையகப்படுத்துவதை விட்டுவிட்டு மக்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு செவிசாய்க்க வேண்டும்.

அன்புமணி

குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உழவர்கள் 7 பேரும் தேசத்துரோக செயல்களில் ஈடுபடவில்லை. குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவதற்கான குற்றங்களான கள்ளச்சாராயம் விற்கவில்லை; உணவுப் பொருட்களைக் கடத்தவில்லை; மணல் கடத்தலில் ஈடுபடவில்லை; பாலியல் குற்றங்களைச் செய்யவில்லை. ஆனாலும் இவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்குக் காரணம், செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக முப்போகம் விளையும் தங்களின் நிலம் பறிக்கப்படுவதைக் கண்டித்து அறவழியில் போராட்டம் நடத்தியதுதான். மண்ணுரிமைக்காகப் போராடும் மக்களை குண்டர் சட்டத்தில் அடைக்கும் அளவுக்கு தமிழக அரசு கீழிறங்கிச் சென்றிருப்பதை நியாயப்படுத்தவே முடியாது. மண்ணைக் காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட உழவர்களைப் பழிவாங்கும்வகையில் தமிழக அரசு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. நீதிக்காகப் போராடும் உழவர்களையே கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்கிறது என்றால் அரசு யாருக்காக நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

திருமுருகன் காந்தி

தமிழ்நாடு அரசு செய்யாறு மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தைக் கைவிடவேண்டும். கைது செய்யப்பட்ட மக்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். கிராமங்களை முற்றுகையிட்டுள்ள காவலர்களை உடனடியாக விலக்கவேண்டும். தொழிற்பூங்காக்கள் அமைப்பது, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தைப் பெருக்குவதற்கு சிறந்த வழிமுறை என்றாலும், முதலாளிகளின் வளர்ச்சிக்காக மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் எந்த ஒரு திட்டமும் ஏற்புடையதல்ல. வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் இது போன்ற திட்டங்களை அரசு கைவிட வேண்டும். இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். நாட்டின் நலன் காக்க மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்.