நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்குச் செல்ல இன்று முதல் வரும் 22ஆம் தேதிவரை ஏழு நாள்களுக்குத் தடைவிதிக்கப்படுகிறது.
கோடை சுற்றுலா பருவ காலத்தில் உதகைக்குச் சுற்றுலா செல்வோரில் ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்குச் செல்வது வழக்கம். அப்படிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அரசுப் பேருந்துகளிலும், தனிப்பட்ட வாகனங்களிலும் கணிசமாகப் பயணிக்கிறார்கள்.
தொட்டபெட்டாவுக்குச் செல்லும் தனியார் வாகனங்களுக்கு வனத் துறை சார்பில் சோதனைச்சாவடி மூலம் பாஸ்டேக் முறை மூலம் கட்டணம் வசூலிக்கும் முறை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கோடைக் காலத்தில் வாகனங்களின் எண்ணிக்கை ஒரே நேரத்தில் அதிகமானதால் உதகையில் உள்ள சோதனைச் சாவடியில் நெரிசல் ஏற்பட்டது.
ஏற்கெனவே உதகையிலும் கொடைக்கானலிலும் சுற்றுலாப் பயணிகளின் வாகன நெரிசலால் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இதுவும் மலைப்பகுதியினரை மேலும் அவதியடையச் செய்தது.
இதைப் போக்கும்வகையில் சோதனைச் சாவடியைப் பெரிதாக அமைக்கும் பணி நாளை முதல் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி இன்றுமுதல் வரும் 22ஆம் தேதிவரை சுற்றுலா வாகனங்கள் தொட்டபெட்டா சிகரத்துக்குச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.