வங்கக் கடலின் தென்மேற்குப் பகுதியில் இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக நாளை முதல் வரும் 16ஆம்தேதி வரை சென்னை, சுற்றுவட்டார மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜானின் கணிப்பின்படி, நாளை 12ஆம் தேதி முதல் வரும் 17ஆம் தேதிவரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவு இருக்கும்.
நடப்பு வடகிழக்குப் பருவ மழைக்காலத்தின் ஐந்தாவது மழையாக இது இருக்கும்.
சென்னை வட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி விழுப்புரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, காவிரிப் பாசனப் பகுதியின் மற்ற சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.