சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“மிக்ஜம்' புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் ஆற்றொணாத் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மழை நின்று 36 மணி நேரம் கடந்தும் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடியாத அவல நிலை நிலவுகிறது.
பொதுமக்கள் மின்சாரமின்றி, குடிநீர் வசதியின்றி, இயற்கை உபாதைகளுக்கு இடமின்றி அல்லலுற்றுக் கொண்டிருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல், பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததன் காரணமாக அங்கு வைக்கப்பட்டுள்ள மரச் சாமான்கள், தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம் என பல்வேறு விலை உயர்ந்த பொருட்கள் மழை நீரினால் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக பலத்த நிதிச் சுமை பெரும்பாலான குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
வணிகர்களைப் பொறுத்தவரையில், கடந்த நான்கு நாட்களாக அவர்களுடைய வியாபாரம் முற்றிலும் முடங்கிவிட்டது. பெரும்பாலான இடங்களில், கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததன் காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பொருட்களும் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
ஒரு பக்கம் குடும்பம், மற்றொரு பக்கம் வியாபாரம் என இரண்டையும் எதிர்கொள்ளக்கூடிய அவல நிலைக்கு வணிகர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கூடுதல் நிதிச் சுமை, வருவாய் இழப்பு என இரட்டை தாக்குதலுக்கு வணிகர்கள் ஆளாகியுள்ளனர். அவர்களின் நிலைமை பரிதாபகரமான ஒன்று. வணிகர்களின் நிலைமையை நினைக்கும்போது "உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால், மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி" என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது. மொத்தத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது.என்ன செய்வது என்று புரியாமல் திகைத்துக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில், மின்சாரக் கட்டணம் அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான குடும்பங்களால் மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில், மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை குறைந்தபட்சம் ஒரு மாதம் நீட்டித் தருமாறு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.