சென்னையில் நேற்று நடைபெற்ற ம.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சியின் தொண்டர் அணி அமைப்பாளர் பச்சைமுத்து உட்பட்ட மதுரை நிர்வாகிகள் இரவே ஊர்திரும்பத் தொடங்கினார்கள். கிட்டத்தட்ட பயணம் முடியப்போகும் தருணத்தில், மேலூர் சிட்டம்பட்டி சோதனைச்சாவடியில் நின்றுகொண்டிருந்த வாகனத்தின் பின்னால் இவர்களின் கார் போனது. அப்போது எதிர்பாராதவிதமாக முன்னைய வண்டியின் மீது மோதியது.
இதில் பச்சைமுத்து, அவரின் தம்பியும் மதுரை மாநகர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளருமான அமல்ராஜ், இன்னொரு நிர்வாகி புலிசேகர் ஆகிய மூவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த மற்ற இருவர் மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்துவந்த காவல்துறையினர் மூவரின் சடலங்களையும் உடற்கூராய்வுக்காக எடுத்துச்சென்றனர்.
விபத்துகுறித்து தகவல் அறிந்த திருச்சி எம்.பி.யும் ம.தி.மு.க. முதன்மைச்செயலாளருமான துரை வைகோ, கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். நேற்று இரவுதான் மூவரும் தன்னைப் பார்த்துவிட்டுச் சென்றதாகவும் பகலில் புறப்படுமாறு தான் கூறியபோது அவர்கள் அப்படியே செய்வதாகக் கூறிவிட்டு, இரவுப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தன் இரங்கல் செய்தியில் மிகவும் வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார்.