சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் அரவிந்த் (29) என்பவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவ மாணவர்களிடையே இணையம் வாயிலாக சர்வே எடுத்தது. அதில் கடந்த 12 மாதங்களில் 16.2 சதவீதம் பேர் அதாவது சுமார் ஆறில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்தாக தெரியவந்துள்ளது. 25 சதவீத இளங்கலை மாணவர்களும் 15 சதவீத முதுகலை மாணவர்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில், பெண் பயிற்சி மருத்துவர் ஷெர்லின் என்பவர் 5ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதேபோல், நேற்று முன்தினம் விருதுநகரில் இளங்கலை மருத்துவம் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவி ஆதி ஸ்ரீவிவேகா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த நான்கு நாள்களில் இரண்டு மருத்துவ மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று சென்னை ஓமந்தூரார் தோட்டம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் முதலாம் ஆண்டு படிக்கும் அரவிந்த் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் (29) இன்று காலை விடுதி அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரின் தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலக தற்கொலை தடுப்புநாள் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி வர உள்ள நிலையில், மருத்துவ மாணவர்கள் இப்படி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்வது அதிர்ச்சியளிக்கிறது.