சென்னை காவல்துறை ஆணையர் மாற்றப்பட்டதை அடுத்து, வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர், காவல்துறையின் வடக்கு மண்டல சரகத் தலைவராக(ஐஜி) நியமிக்கப்பட்டுள்ளார். அப்பதவியிலிருக்கும் நரேந்திரன் நாயர் வடசென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னைப் புறநகரான தாம்பரம் காவல்துறை ஆணையர் அமல்ராஜும் மாற்றப்பட்டு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய இடத்துக்கு அபின் தினேஷ் மோத்தக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. ஜி.வெங்கட்ராமன், நிர்வாகப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவருடைய பொறுப்பை, இதே பிரிவில் ஐ.ஜி.யாக இருக்கும் அன்பு கூடுதலாக கவனிப்பார்.
சைபர் குற்றப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய்குமார், கடலோரப் பாதுகாப்புக் குழும கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் ஆகியோர் பரஸ்பரம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தென்சென்னை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, மதுரையை மையமாகக் கொண்ட தெற்கு சரக காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அப்பதவியில் இருக்கும் டாக்டர் கண்ணன் தென்சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருப்பூர் ஆணையர் பிரவீண் குமார் அபினபு சேலத்துக்கும், சேலம் ஆணையர் விஜயகுமாரி ஆயுதப்படைக்கும், அங்கிருக்கும் லட்சுமி திருப்பூர் ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.