மாணவர்கள் 
தமிழ் நாடு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு : தமிழ் பாடத்தைவிட விஞ்சிய ஆங்கிலத் தேர்ச்சி!

Staff Writer

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளில் ஆங்கிலப் பாடத்தில் அதிகமான மாணவர்கள் நூற்றுக்குநூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி நிறைவடைந்தது. 4,107 மையங்களில் 9,08,000 மாணவர்கள் பத்தாம் வகுப்பு இத்தேர்வை எழுதினர்.

இடையில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் முடிவடைந்ததும், விடைத்தாள்களைத் திருத்தும் பணி 88 முகாம்களில் நடைபெற்றது. பின்னர் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன.

அதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி இன்று காலை 9.30 மணிக்கு பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 12 ஆயிரத்து 625 பள்ளிகளில், 4,105 பள்ளிகள் 100% தேர்ச்சியைப் பெற்றுள்ளன. இதில் 1,364 அரசு பள்ளிகளும் அடக்கம்.

மேலும், 99.15% பேர் ஆங்கிலத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதேநேரம் தமிழ், பிற மொழிப் பாடங்களில் 96.85% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல கணிதத்தில் 96.78% பேரும், அறிவியல் பாடத்தில் 96.72% பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 95.74% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆங்கிலத்தில் 415 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது தமிழ், பிற மொழிப் பாடங்களைக் காட்டிலும் கூடுதல் ஆகும். தமிழ்- பிற மொழிப் பாடத்தில் 8 பேர் மட்டுமே 100க்கு100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.