சின்னதுரையை சந்தித்த அமைச்சர் மா.சு 
செய்திகள்

நாங்குநேரி மாணவருக்கு சென்னை மருத்துவர்கள் சிகிச்சை!

Staff Writer

நாங்குநேரியில் சக மாணவர்களால் வெட்டப்பட்ட மாணவர் சின்னதுரைக்கு, சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய பாகுபாடு காரணமாக அரிவாளால் வெட்டப்பட்ட மாணவரை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுவனுக்கு மிகச்சரியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்கு ஸ்டான்லி மருத்துவமனை பொருத்தமாக இருக்கும் என தெரிவித்தனர். சிறுவனை இங்கிருந்து சென்னைக்கு அழைத்து செல்வதை காட்டிலும் அங்கிருந்து மருத்துவர்கள் வந்து ஒருவாரம் அல்லது 10 நாட்கள் தங்கி சிகிச்சை வழங்கலாம் என பேசப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனை முதல்வர் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜியிடம் பேசியுள்ளார். இன்னும் ஓரிரு நாளில் மருத்துவர்கள் வருவார்கள். கையேயே புதிதாக ஒட்டும் வகையிலான சிகிச்சையில் மருத்துவர்கள் சாதனை புரிந்தவர்கள். இத்தகைய சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

சிறுவனின் தாயிடம் பேசி உள்ளோம். மனு அளித்துள்ளார். ஏதாவது அரசு வேலை வாய்ப்பு வழங்க கூறியுள்ளனர். சிறுவனுக்கு 18 வயது நிரம்பியவுடன் நிச்சயம் அரசு சார்பில் அரசு வேலை வழங்கப்படும். அவர்கள் குணமடைந்தவுடன் நல்ல உறைவிட பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். அவர்கள் கல்வி தொடரவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது'' என்றார்.