தமிழ் மக்கள் பொதுச் சபை, இலங்கை 
இலங்கை

அதிரடி முடிவு... மீண்டும் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு போட்டியில்லை!

Staff Writer

இலங்கை அதிபர் தேர்தலில் ஈழத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் பொதுமக்கள் அமைப்புகளும் சேர்ந்து தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு என்ற பெயரில் பொது வேட்பாளரை நிறுத்தின. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவருமான அரியநேத்திரன் 2.26 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஐந்தாம் இடத்தில் வந்திருந்தார். 

விடுதலைப்புலிகள் காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்ததைப் போன்ற பொதுவான ஆதரவு நிலை, இந்தக் கட்டமைப்புக்கும் கிடைத்தது என்றாலும், வாக்குகள் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்த கட்சிகள் பலவும் இந்தக் கட்டமைப்பிலும் இன்னும் சில பெயர்களிலும் சிதறிய நிலையில், மீண்டும் கூட்டமைப்பாகப் போட்டியிட வருமாறு மையக் கட்சியான தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் அதை பல முன்னாள் கூட்டமைப்புக் கட்சிகளும் நிராகரித்துவிட்டன. 

இதனிடையே, கடந்த 26ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் கூடிய கட்டமைப்பின் அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள், நாடாளுமன்றத் தேர்தலிலும் பொதுக் கட்டமைப்பின் சார்பில் அதன் சங்கு சின்னத்தில் போட்டியிடலாம் என யோசனை தெரிவித்தனர். 

அதற்கு பதில் அளிக்க பொதுமக்கள் சபையினர்  அவகாசம் கோரினர். இன்று திருகோணமலை ஆயர் இல்லத்தில் கூடிய தமிழ் மக்கள் பொது சபையினர், அதிபர் தேர்தலைப் போல மீண்டும் பொதுக்கட்டமைப்பின் மூலம் போட்டியிட வேண்டாம் என முடிவுசெய்தனர். 

மேலும், சங்கு சின்னத்தில் அரசியல் கட்சிகள் போட்டியிட வேண்டாம் என்றும் அக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.   

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram