சஜித் பிரேமதாசா
இலங்கை

சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு- தமிழரசுக் கட்சி விளக்கம்!

Staff Writer

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு அளிப்பதென தமிழரசுக் கட்சி முடிவெடுத்துள்ளது.

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பல தமிழ்க் கட்சிகளும் பொதுமக்கள் அமைப்புகளும் இணைந்து பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனை நிறுத்தியுள்ளன. ஆனால், அவர் உறுப்பினராக உள்ள தமிழரசுக் கட்சியின் பழம்பெரும் தலைவர் சம்பந்தன் அண்மையில் மறைந்தார். அதையொட்டி அக்கட்சியில் ஏற்பட்ட சூழலில் அதிபர் தேர்தலில் என்ன நிலைப்பாடு என்பதிலும் இழுபறி ஏற்பட்டது. 

பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னரும் அக்குழப்பம் நீடித்தது. இந்நிலையில், நேற்று வவுனியாவில் அக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

அதில், மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் அதில் அதிபர் தேர்தலில் சஜித்தை ஆதரிக்கும் தீர்மானமும் ஒன்று என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகத்தினரிடம் தெரிவித்தார்.

இதேசமயம், தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான அரியநேத்திரனைப் போட்டியிலிருந்து விலகக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அவருக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, இந்த முடிவு கட்சியின் முடிவல்ல எனக் கூறியுள்ளார். ஆனால், மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி.கே.சிவஞானமும் சுமந்திரனும் இது முறைப்படியான முடிவு என மறுத்துள்ளனர். 

விடுதலைப்புலிகளால் முன்னிறுத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினராக ஆன பலரும் போட்டியிட்ட சின்னம், தமிழரசுக் கட்சியின் சின்னம் என்பதால் கட்சிசாராத பலரும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராகக் கருதப்பட்டார்கள். போர் முடிவுக்கு வந்ததையடுத்து கூட்டமைப்பின் தீர்மானிக்கும் சக்தியாக தமிழரசுக் கட்சி இருந்துவந்தது. கூட்டமைப்பில் இருந்த பல கட்சிகளும் முடிவெடுத்து தேர்தல் வேலையைத் தொடங்கிய பின்னரும் தமிழரசுக் கட்சி நிலையெடுக்காமல் இழுத்துக்கொண்டே வந்தது குறிப்பிடத்தக்கது.   

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram